Monday, February 25, 2008

நிர்வாண உலகம்

நிர்வாண உலகில் கோவணம் கட்டியவன் கூட பைத்தியக்காரன் என்பார்கள். உடையணிந்தோர் உலகில் நிர்வாணம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் ஒரு நிர்வாணம் உலகெங்கிலும் கொண்டாடப் படுகிறது. அது புத்தரின் நிர்வாணம்.ஆடை துறத்தல் நிர்வாணமல்ல. ஆசை துறத்தலே நிர்வாணம்.புத்தர் உடல் மீதான பற்றை விடுத்து நிர்வாண நிலையடைந்த நாளை பிப்ரவரி 8ம் தேதி பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர். சில பகுதிகளில் பிப்ரவரி 15ம் தேதியும் அனுசரிக்கப் படுகிறது...கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு மே மாத பவுர்ணமி தினத்தில் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்த சித்தார்த்தன் பின்னாளில் கவுதம புத்தராக பரிணமித்த்து எப்படி?வெளியுலகத் தொடர்புகளின்றி அரண்மனையின் சுகபோகங்களை மட்டுமே கண்டு வளர்ந்து, தனது 16வது வயதில் யசோதரையை மணந்த சித்தார்த்தன் புற உலக வாழ்க்கையின் துன்பங்களை உணராமலே வாழ்ந்து வந்தார். மனைவியோடும் மகன் ராகுலனோடும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் தனது 29ம் வயதில் முதன் முதலாக ஒரு புறப்பயணம் மேற்கொண்டபோது ஒரு பிச்சைக்கார வயோதிகரையும், துன்புறும் ஒரு நோயாளியையும், ஒரு பிண ஊர்வலத்தையும், துறவி ஒருவரையும் காண நேரிட்டது. வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பல புரிதல்களை இவர்களில் கண்டு கொண்ட சித்தார்த்தன் உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டான்..சித்தார்த்தன் பிறந்த போது வருகை தந்த ஞானி ஒருவர் அவன் துறவியாக வருவான் என்று கூறியதால் துன்புறும் மக்களைக் காண அனுமதிக்காமல் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வைத்து சுகபோகங்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது...அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தி இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய சுகபோகங்கள் திகட்டி விட்ட சித்தார்த்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். சுகபோகங்கள் இல்லாத மக்கள் இருப்பதையும் அவர்களின் துன்பம், மூப்பு, நோய், வறுமை, மரணம், வாழ்க்கையின் நிலையாமை போன்றவற்றை உணர்ந்து கொண்டான்.மனைவி, மகன், அரண்மனை சுகபோகங்களை உதறி வெளியேறிய சித்தார்த்தன் தனது 35ம் வயதில் கயா என்னுமிடத்தில் போதிமரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டார். அங்கே ஞானநிலை பெற்று சித்தார்த்தன் புத்தரானார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என்பது அவரது போதனைகளின் அடிப்படையாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஆசைகளைத் துறந்து புத்த நிலையை அடைய முடியும் என்பது அவரது அறிவுரை...புத்தரின் காலத்துக்குப் பின் அவரது அறிவுரைகள் பவுத்த மதமாக பரிணமித்தது.கலிங்கப் போருக்குப் பின் பவுத்தத்தை தழுவிய அசோகன் தனது மகளையும் மகனையும் புத்த துறவிகளுடன் அனுப்பி வைத்தான். அவர்களே இலங்கை, இந்தோனேஷியா முதலிய தென்கிழக்காசிய நாடுகளின் பவுத்தம் பரவக் காரணமானவர்கள்.புத்தரின் சீடர்களால் பரப்பப் பட்ட பவுத்த மதம் பின்னாளில் இந்தியாவில் தனது செல்வாக்கை பெருமளவு இழந்த போதிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. தாழ்த்தப் பட்டவர்களின் தலைவராக கொண்டாடப் படும் அம்பேத்கர் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உயர்சாதி மக்களால் மதசமத்துவம் தரப்படாத நிலை கண்டு தனது மக்களோடு பவுத்த மததுக்கு மதம் மாறினார்

No comments: