Monday, February 25, 2008

உன் காதலும்... என் காதலும்

எனை தூரப்பார்த்து உற்சாகப்படுவதிலும்
பக்கத்தில் வந்து பதட்டப்படுவதிலும்
இடம்வலம்இடம்வலம்இடம்வலம்
என அல்லோலகல்லோலப்படும் உன் விழிகளிலும்
பேசவரும் வார்த்தைகளையெல்லாம்
உதடுமடித்து எனக்கே வலிக்குமளவு நீ கடித்தலிலும்
நீண்டும்சுருங்கியும் நீண்டும்சுருங்கியும்
பாடுபடும் உன் உதடுகளின் ஓரவஞ்சனை சிரிப்புகளிலும்
சரியாயிருக்கும் ஆடையை சரிப்படுத்திக்கொண்டேயிருக்கும்
உன் பதட்டம் தோய்ந்த மென்காந்தள் விரல்களிலும்
வழிந்தோடுகிறது
என் மீதான உன் காதல்
இதையெல்லாம்
கண்டு ரசித்து உண்டு கொழுத்து
பேரண்டமாய் விரிந்து வளர்ந்து
எனை படுத்துகிறது
உன் மீதான என் காதல்

அழகு குத்தியவள்...


அழகு குத்தியவள்...

உனக்கு வலிக்கவில்லையாடி...
உடல் முழுக்க இப்படி
அழகு குத்தி வைத்திருக்கிறாயே...

அஞ்சாதே - திரைப்படப் பார்வை

மிக நீ..........ண்ட இடைவெளிக்குப் பிறகு, நல்ல படம் பார்த்த திருப்தியைத்தந்த படம். நட்பை அடிநாதமாக அமைத்து பல தளங்களில் இயங்குகிறது படம். நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும் வாழ்வின் எதார்த்தம்தான் படத்தின் திருப்புமுனை. SI ஆவதே தன் வாழ்நாள் லட்சியமாக செயல்படும் கிருபாவும்(அஜ்மல்), “நான் போலீஸ் வேலைக்கு போகமாட்டேன். எல்லாரும் மாமான்னு கூப்பிடுவாங்க..” என்று சொல்லிக்கொண்டு இலக்கில்லாமல் சுற்றித்திரியும் சத்யாவும் (நரேன்) மிக நெருங்கிய நண்பர்கள். இருவரின் அப்பாக்களும் போலீஸ்காரர்கள். துரத்தும் வாழ்க்கைச்சூழலில் சத்யா SI தேர்வில் (குறுக்கு வழியில்) தேர்ச்சியடைய, கிருபா தோல்வியடைந்து இலக்கின்றி குடித்து அலையும் நிலைக்கு வருகிறான்.
பெண்களை கடத்திவந்து, கற்பழித்து, பணம் பறிக்கும் கும்பலாக லோகுவும் (பாண்டியராஜன்), தயாவும் (பிரசன்னா) இருக்கிறார்கள். இவர்களுடன் தன்முனைப்பின்றி கிருபா இணைகிறான். உச்சபட்சமாக இவர்கள் போலீஸ் IG யின் பெண்களை கடத்துகிறார்கள். அதன் பின் போலீஸ் இவர்களை எப்படி வளைக்கிறது... தயா மற்றும் லோகு என்ன ஆனார்கள்... தன் நண்பன் கிருபாவுக்காக சத்யா என்ன செய்கிறான்... இப்படி பல கேள்விகளுக்கான பதிலை எதார்த்தத்துடன் தருகிறது படம்.
நரேன், அஜ்மல் மற்றும் பிரசன்னா அனைவருக்கும் அற்புதமான களம் அமைத்து தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். மூவரும் அதை அற்புதமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் படத்தின் அழகு. “அழகிய தீயே...” படத்தில் பார்த்த பிரசன்னாவா இது என்று ஆச்சரியப்படவைக்கும் விதத்தில் மிகவும் தைரியமாக வி்ல்லன் பாத்திரத்தை ஏற்று அசத்தியிருக்கிறார். நீண்ட குர்தாவும், வலது கையில் பெண்கள் ஸ்டைலில் கடிகாரம் கட்டிக்கொண்டு அடிக்கொருமுறை கையைத்திருப்பி மணிபார்க்கும் மேனரிஸமும், வழிந்து தொங்கும் தலைமுடிக்கிடையே சாதாரணமாக ஆனால் கூர்ந்து பார்க்கும் பார்வையுமாக அனைத்து பாராட்டுகளையும் தட்டிச்செல்கிறார் பிரசன்னா. அவருடைய இளமையான குரல் இந்த பாத்திரத்துக்கும் பொருந்தி வந்திருப்பது ஆச்சரியமான மகிழ்ச்சி. இனி இவர் அதிகம் கவனிக்கப்படுவார்.
படத்தின் அறிமுகக்காட்சியிலிருந்து கடைசிவரை பரபரப்பாக வரும் நரேன் சத்யா பாத்திரத்தில் ஜோராக பொருந்துகிறார். ஓவர் ஆக்டிங் போலத்தெரியும் அவருடைய சில பாடி லாங்வேஜ் உறுத்தலாக இருந்தாலும் போகப்போக அது நமக்கு பழகிப் போகும் என்றே தோன்றுகிறது. மலையாள வாசனையோடு அவர் பேசும் தமிழும் அப்படியே. தான் ஏற்றிருக்கும் பாத்திரத்தின் கனமறிந்து ஒவ்வொரு காட்சியிலும் தன்னை முழுமையாக தந்திருக்கும் நரேன் பாராட்டிற்குரியவர். தண்ணி அடித்துவிட்டு வந்து வீட்டுக்குள் வரமாட்டேன் என்று சலம்பும் போதும், தியேட்டரில் “தவமாய் தவமிருந்து..” ராஜ்கிரணைப் பார்த்து விட்டு... “இவன்தாண்டா அப்பன்...” என்று ரவுசு விடும்போதும் நம்மையும் ரசிக்க வைக்கிறார்.
கிருபா எனும் பரிதாபத்துக்குரிய பாத்திரத்தில் தமிழில் அறிமுகமாயிருக்கும் அஜ்மல் ஒரு குறிப்பிடத்தக்க புதுவரவு. கிருபாவின் தங்கையாக வரும் விஜயலட்சுமிக்கும் கதையோட்டத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் அதை பயன்படுத்திக்கொண்டிருப்பதும் சிறப்பு. குருவி என்கிற பாத்திரத்தில் வரும் கை ஊனமானவர் (பெயர் தெரியவில்லை), கால் ஊனமான இன்னொருவர் (அவர் பெயரும் தெரியவில்லை), பாண்டியராஜன், பொன்வண்ணன், MS பாஸகர், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்ற அனைத்து பாத்திரங்களும் தேவையறிந்து படைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பாத்திரமும் சிரத்தையுடன் செதுக்கப்பட்டிருக்கிறது. அனைவரின் பங்களிப்பும் பிரமாதம்.
படத்தின் கேப்டன் மிஷ்கினுக்கு ஆளுயுர பொக்கே கொடுத்து பாராட்டலாம். இந்த திரைக்கதை மிகவும் அற்புதமாக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. தொய்வே ஏற்படாமலும், அதே நேரம் விலாவரியாகவும் சொல்லப்படும் காட்சிகள் மிகப் பிரமாதம். ஒவ்வொரு காட்சியும் மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு, தேர்ந்த தேடலுக்குப்பின், அந்த சூழலுக்கேற்ப காட்சிப்படுத்தப்பட்டு நம் மனதைக்கவர்கிறது. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற பதட்டத்தில் நம்மை கடைசிவரை வைத்திருப்பதில் இயக்குனர் வெற்றியடைகிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன ட்விஸ்ட்டுகளும் லாஜிக்கோடு அமைந்திருப்பது மிகச்சிறப்பு.
சுந்தர் சி.பாபுவின் பாடல்களை தியேட்டரில் தம்மடிக்க வெளியே போகாமல் அமர்ந்து கேட்கலாம். படத்தின் பின்னணி இசைச்சேர்ப்பும் மிகுந்த கவனத்துடன் செய்யப்பட்டிருக்கிறது. மகேஷின் ஒளிப்பதிவு ஒவ்வொரு சூழலிலும் அந்த தன்மைக்கேற்ப செயல்படுகிறது. படத்தின் முதல் காட்சி, தரையோடு தரையாக கேமரா சுழலும் காட்சி என தன் இருப்பை பறைசாற்றுகிறார் ஒளிப்பதிவாளர்.
“எனக்கு ஒரு ஃபுல் ஒரிஜினல் சரக்கு வேணும்...” என பிரசன்னா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நம் டாஸ்மாக்கில் எல்லாம் டூப்ளிகெட் சரக்குதானோ என்ற அங்கதக்கேள்வி எழுகிறது. குறுக்கு வழியில் SI தேர்வில் தேர்ச்சியடைவதற்கு சத்யா செய்யும் முயற்சிகளும் அந்த செயல்களும் மிகவும் அங்கதத்தோடு நம் சமூக அமைப்பை சாடுகின்றன. ரோட்டில் வெட்டுப்பட்டு உயிருக்குப் போராடிக்கிடக்கும் ஒருவனை காப்பாற்ற சத்யா செய்யும் முயற்சிகளும் அதன் விளைவும் அச்சு அசல் உண்மை நிலையை அப்பட்டமாக காண்பிக்கின்றன. IG யின் பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டால் போலீஸ் டிபார்ட்மெண்ட் என்ன செய்யும்... சுற்றி நம்மை போலீஸ் வளைக்கும் சூழலில் அதிலிருந்து தப்ப சமூகவிரோதிகள் என்னவெல்லாம் செய்வார்கள்... இப்படி பல சூழ்நிலைகளை ஆய்ந்து நம்பும் விதத்தில் காட்சியமைத்திருப்பது சிறப்பு.
மிகவும் அரிதாக வரும் தரமான படங்களின் வரிசையில் இப்படமும் சேர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்கும்படியான விஷயங்களும், புத்திசாலித்தனமான ட்விஸ்ட்டுகளும் படத்தை மீண்டும் பார்க்கத்தூண்டும்

நிர்வாண உலகம்

நிர்வாண உலகில் கோவணம் கட்டியவன் கூட பைத்தியக்காரன் என்பார்கள். உடையணிந்தோர் உலகில் நிர்வாணம் பைத்தியக்காரத்தனமானது. ஆனால் ஒரு நிர்வாணம் உலகெங்கிலும் கொண்டாடப் படுகிறது. அது புத்தரின் நிர்வாணம்.ஆடை துறத்தல் நிர்வாணமல்ல. ஆசை துறத்தலே நிர்வாணம்.புத்தர் உடல் மீதான பற்றை விடுத்து நிர்வாண நிலையடைந்த நாளை பிப்ரவரி 8ம் தேதி பவுத்தர்கள் கொண்டாடுகின்றனர். சில பகுதிகளில் பிப்ரவரி 15ம் தேதியும் அனுசரிக்கப் படுகிறது...கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் ஒரு மே மாத பவுர்ணமி தினத்தில் இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில் பிறந்த சித்தார்த்தன் பின்னாளில் கவுதம புத்தராக பரிணமித்த்து எப்படி?வெளியுலகத் தொடர்புகளின்றி அரண்மனையின் சுகபோகங்களை மட்டுமே கண்டு வளர்ந்து, தனது 16வது வயதில் யசோதரையை மணந்த சித்தார்த்தன் புற உலக வாழ்க்கையின் துன்பங்களை உணராமலே வாழ்ந்து வந்தார். மனைவியோடும் மகன் ராகுலனோடும் சுகபோக வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் தனது 29ம் வயதில் முதன் முதலாக ஒரு புறப்பயணம் மேற்கொண்டபோது ஒரு பிச்சைக்கார வயோதிகரையும், துன்புறும் ஒரு நோயாளியையும், ஒரு பிண ஊர்வலத்தையும், துறவி ஒருவரையும் காண நேரிட்டது. வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பல புரிதல்களை இவர்களில் கண்டு கொண்ட சித்தார்த்தன் உலக வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டான்..சித்தார்த்தன் பிறந்த போது வருகை தந்த ஞானி ஒருவர் அவன் துறவியாக வருவான் என்று கூறியதால் துன்புறும் மக்களைக் காண அனுமதிக்காமல் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வைத்து சுகபோகங்களில் ஈடுபடுத்தியதாக கூறப்படுகிறது...அது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தி இருக்க வேண்டும். அளவுக்கு மீறிய சுகபோகங்கள் திகட்டி விட்ட சித்தார்த்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றான். சுகபோகங்கள் இல்லாத மக்கள் இருப்பதையும் அவர்களின் துன்பம், மூப்பு, நோய், வறுமை, மரணம், வாழ்க்கையின் நிலையாமை போன்றவற்றை உணர்ந்து கொண்டான்.மனைவி, மகன், அரண்மனை சுகபோகங்களை உதறி வெளியேறிய சித்தார்த்தன் தனது 35ம் வயதில் கயா என்னுமிடத்தில் போதிமரத்தடியில் கடும் தவம் மேற்கொண்டார். அங்கே ஞானநிலை பெற்று சித்தார்த்தன் புத்தரானார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என்பது அவரது போதனைகளின் அடிப்படையாக இருந்தது. ஒவ்வொரு மனிதனும் ஆசைகளைத் துறந்து புத்த நிலையை அடைய முடியும் என்பது அவரது அறிவுரை...புத்தரின் காலத்துக்குப் பின் அவரது அறிவுரைகள் பவுத்த மதமாக பரிணமித்தது.கலிங்கப் போருக்குப் பின் பவுத்தத்தை தழுவிய அசோகன் தனது மகளையும் மகனையும் புத்த துறவிகளுடன் அனுப்பி வைத்தான். அவர்களே இலங்கை, இந்தோனேஷியா முதலிய தென்கிழக்காசிய நாடுகளின் பவுத்தம் பரவக் காரணமானவர்கள்.புத்தரின் சீடர்களால் பரப்பப் பட்ட பவுத்த மதம் பின்னாளில் இந்தியாவில் தனது செல்வாக்கை பெருமளவு இழந்த போதிலும் தென்கிழக்கு ஆசியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. தாழ்த்தப் பட்டவர்களின் தலைவராக கொண்டாடப் படும் அம்பேத்கர் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உயர்சாதி மக்களால் மதசமத்துவம் தரப்படாத நிலை கண்டு தனது மக்களோடு பவுத்த மததுக்கு மதம் மாறினார்

ஆனந்தவிகடனின் போக்கு - ஒரு வாசகனின் பார்வை

மூன்று ரூபாய்க்கு ஆனந்தவிகடன் விற்ற காலத்திலிருந்து, விகடன் வாசித்து வருகிறேன். அவ்வப்போது விகடனின் தோற்றம் மற்றும் உள்ளீடு மாறும். ஒவ்வொரு மாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இதழை பொலிவுபடுத்தியே வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை. புத்தம்புதிய பகுதிகள், பரீட்சார்த்த முயற்சிகள் என விகடனின் அனைத்து அவதாரங்களும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டவையே. மதன், சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்த நேரத்தில் மற்ற பகுதிகளும் இவற்றிற்கு இணையாக வரவேண்டுமென்று மிக சிரத்தையோடு எழுதப்பட்டன. விகடனின் ஜோக்குகளுக்கென்று இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றதென்பது உண்மை.
விகடனிலிருந்து மதன் விலகியதும், சீனிவாசன் பொறுப்பேற்றதும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நான் பார்க்கிறேன். ஆயினும் மதன் விலகியதை மிகவும் நாகரிகமாக பாலசுப்ரமணியன் கையாண்டார். அவருடைய “வணக்கம்” கட்டுரை விகடனின் வாசகர்களின் மனதில் இன்றும் நிற்கிறது. அந்த நிகழ்விற்கு பின்னர் மதன் “விண் நாயகன்” எனும் இதழைத்தொடங்கி (“இந்தியா டுடே” சைஸில்) நடத்த, அந்த பத்திரிகையைப்பற்றி குமுதம் அரசு பதில்களில் “எழுந்து நின்று பாராட்டி வரவேற்பதாக” எழுதப்பட்டது. ஆயினும் அந்த இதழ் சொற்ப நாட்களில் நின்றுபோயிற்று. இவை நடந்து கொண்டிருந்தபோதிலும் மதன் தன் “ஹாய் மதன்” பகுதியை நிறுத்தாமல் விகடனில் எழுதிக்கொண்டுதானிருந்தார். மதன் விகடனிலிருந்து விலகிய சூட்டோடு குமுதத்தில்கூட ஒரு கட்டுரைத்தொடர் எழுதினார் (பெயர் நினைவிலில்லை).
விகடனில், தலையங்கம் மற்றும் கார்ட்டூன் இரண்டு பக்கங்களில் வரும். சில காலம் மதனின் கார்ட்டூன் இல்லாமலேயே விகடன் வந்ததாகக்கூட நினைவு. பின்பு ஹரனின் கார்ட்டூன்கள் முழுப்பக்க அளவில் ஆசிரியரின் ஒரு பக்க கடிதத்தோடு வரத்துவங்கின. இது கிட்டத்தட்ட இரண்டாவது தலையங்கம் மற்றும் இரண்டாவது முழுப்பக்க கார்ட்டூனாகவே அமைந்தது. மதனை முழுமையாக விலக்கிவிட இயலாத தன்மையாலோ, அடுத்த ஸ்டெப்னி போன்று ஹரனை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற உந்துதலினாலோ இது நடந்திருக்கலாம். இது விகடனின் ஆசிரியர் குழுவின் முடிவாக இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லை. ஆயினும் கார்ட்டூன் ஸ்பெஷலிஸ்ட்டாக விகடன் கொண்டாடிய மதன் இருக்கையிலேயே, இன்னொருவரின் முழுப்பக்க கார்ட்டூனை தொடர்ந்து வெளியிடுவது மதனுக்கு எப்படிவொரு அசூசையான உணர்வைக் கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.
ஹாய் மதனும் இப்போது நான்கு பக்கங்களில் வருவதில், இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் புகைப்படங்கள் (பெரும்பாலும் கவர்ச்சிப் படங்கள்) எடுத்துக்கொள்கின்றன. கல்லூரிக்காலத்தில் மதனுக்கு கேள்வி எழுதிப்போட்டு விகடனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாசகன்தான் நான். இப்போது இந்நிலையைப் பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.
மேலும் சமீபத்திய ஞாநி மற்றும் ஜெயமோகன் விவகாரங்களில், ஆனந்த விகடனின் நிலைப்பாட்டினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இப்படித்தான், இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று ஆனந்தவிகடனையும் அதே தட்டில் வைத்து அளந்து பார்த்துவிட முடியவில்லை. ஆனந்தவிகடனின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையோ அல்லது ஆனந்தவிகடன் என் மீது செம்மைப்படுத்தியிருந்த நம்பிக்கையோ தான் என்னுடைய இந்த சிந்தனைக்குக்காரணம் என்று நினைக்கிறேன்.
மேலும் சமீபத்திய ஆனந்தவிகடனின் கவர்ஸ்டோரிகளும் யூகத்திலான விஷயங்களைக்கொண்டே எழுதப்படுகின்றன. உதாரணம் 1 - “ஷங்கர் இயக்கத்தில் ரோபோவில் அஜீத் தான் நடிக்கிறார் - பேசி விட்டார்கள் - அந்த வட்டாரம் சொல்கிறது - கோடம்பாக்கம் பற்றிக்கொண்டு திகுதிகு வென்று எரிகிறது” - என்கிற ரீதியில் ஒரு அட்டைப்படக் கட்டுரை பரபரப்பாக வெளியானது. மற்ற பத்திரிகைகளில் வராத ஒரு விஷயத்தை தான் முந்தித் தந்து விட்டோம் என்று பறைசாற்றத்தான் இந்த அட்டைப்பட கட்டுரை. ஆனால் நடந்த கதையோ வேறு.
சமீபத்திய விகடனின் அட்டைப்படக் கட்டுரையும் ( “வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்!” - அமிதாப் வழியில் ரஜினி) யூகங்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்தைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசாத நிலையிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விகடன் ஆசிரியர் குழு நம்முடைய தமிழ் ப்ளாக்குகளை சமீபகாலமாக படிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கவர்ச்சியான தலைப்பு வைத்து விட்டு அதைப்பற்றி பேசாமல் எழுதப்படும் பதிவுகளின் பாதிப்பாகத்தான் இந்த கட்டுரை வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.
ஆனந்தவிகடனின் தரம் இறங்கி வந்திருப்பதாகவே என் எண்ணத்தில் தோன்றுகிறது. இனியும் என்னால் முன்பு போல ஆவலாவலாக விகடனைத் தேடிப் பிடித்து வாங்கி வரி விடாமல் ஒவ்வொரு படைப்பையும் படிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இதை எழுதுகையில் கூட ஒரு சொல்லமுடியாத வலியை உணர்கிறேன்.

எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?

'மிஸ்ஸியம்மா" படம் பார்த்திருப்பீர்களோ, இல்லையோ, 'வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ என் கதையை' என்ற பாடலைக்கேட்டிருப்பீர்கள். படம் பார்த்திராதவர்களுக்கு ஒரு கதைச் சுருக்கம்: நடிகையர் திலகம் சாவித்திரி (மேரி) -க்கும் சாம்பார் -(sorry, ஜெமினி கணேசனின் அந்தக்காலத்துச் செல்லப்பெயர்) -க்கும் காதல், ஊடல் அது இதுன்னு வந்து கடைசி சீனில் இரண்டுபெருக்கும் கல்யாணம். பெண் - கிறித்துவள் (ஆனால், உண்மையில் சிறு வயதிலேயே இந்துக்குடும்பத்திலிருந்து காணாமல்போன, கதாநாயகனின் முறைப்பெண்தான்); ஆண்: இந்து. மதுரையில் இரண்டாவதாக ஆரம்பிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் 'சிடி சினிமா' தியேட்டரில் (இப்போது வெறும் parking lot ஆக மாறியுள்ளது)படம் பார்த்து விட்டு வெளியே வந்ததும் ரொம்ப ஆத்திரத்துடன் நான் என் அப்பாவிடம் கேட்ட கேள்வி: 'அது எப்படி? ஒரு கிறித்துவப் பெண் ஒரு இந்துவைக் கல்யாணம் பண்ணலாம்?'.பெரும் மத அடிப்படைவாத உணர்வு (utter fundamentalism) தெரிகிறதா, இந்தக் கேள்வியில்? அந்தக் கேள்வியைக் கேட்ட எனக்கு அப்போது வயது என்ன தெரியுமா? பன்னிரண்டோ, பதின்மூன்றோ. ஒரு கிறித்துவர் இன்னொரு கிறித்துவரைத்தான் மணந்துகொள்ள வேண்டுமென்ற கருத்து அந்த இளம் வயதிலேயே என் மனத்தில் அவ்வளவு ஆழமாகப் பதியக் காரணம் என்ன? ஒரு குழந்தை கேட்கும் குழந்தைத்தனமான கேள்வி அது அல்ல என்பதுநிச்சயம். அந்த வயதிலும் மத உணர்வுகள் அவ்வளவு ஆழமாய் என் மனதில் பதிந்திருந்ததென்றால் அது ஒருவகை 'மூளைச் சலவை'யன்றி வேறென்ன? அதோடு இது குழந்தைப்பருவத்தில் மட்டுமே இருந்த ஒரு நிலையும் அல்ல. ஏனெனில், முதுகலை வகுப்பில் நாத்திகரான என் ஆசிரியர் 'பைபிள்' பற்றி ஏதோ கேலியாகச் சொல்ல, அப்போதே அதி வன்மையாக அவர் கூற்றை நான் கண்டித்தேன் - அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி அறிந்திருந்தும். அந்த அளவு என் மதத்தின் மேல் எனக்கு ஈர்ப்பு, ஈடுபாடு...மதங்களை, அவைகள் சொல்லும் கடவுள் கோட்பாடுகளைக் கண்ணை மூடிக் கொண்டால் மட்டுமே நம்பமுடியும்; கண்ணையும், காதையும் கொஞ்சம் திறந்தாலோ, நம் மதங்களாலும், பெற்றோர்களாலும், பிறந்தது முதல் நமக்குக் கற்பிக்கப்பட்ட, ஊட்டப்பட்ட விஷயங்களிலிருந்து கொஞ்சம் விலகி நின்று - with an OBJECTIVE VIEWING - பார்த்தால் (அப்படிப் பார்ப்பது மிக மிகக் கடினம் என்பது நிஜம்; என் மதம்; என் கடவுள் என்ற நிலைப்பாட்டை அறுத்து 'அவைகளை' யான், எனது என்ற பற்றற்றுப் பார்ப்பது அநேகமாக முடியாத காரியம்தான்). அப்படிப் பார்ப்பது எளிதாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்! கடினமானதுதான்; ஆனால், முடியாததல்ல. என்னால் முடிந்திருக்கிறது.அதிலும், நான் அறிந்தவரையில் semitic religions என்றழைக்கப்படும் யூதமதம், கிறித்துவ மதம், இஸ்லாம் மதம் என்ற இந்த மூன்று மதங்களுமே தங்கள் மதத்தினரை தங்கள் (கெடு) பிடிக்குள் இறுக்கமாக வைத்திருக்க முடிவதற்குறிய காரணம் எனக்குப் பிடிபடுவதில்லை. அவர்களிடம் கேட்டால், எங்கள் தெய்வமே உண்மையானது; எங்கள் மார்க்கமே சரியானது; ஆகவேதான், எங்கள் மதத்தை நாங்கள் இறுகப்பற்றியுள்ளோம் என்பார்கள். அப்படியானால், அந்த மூன்றில் எது உண்மையான வேதம்? மூவருக்கும் பொதுவானது - பழைய ஏற்பாடு. யூதர்கள், மோசஸ்வரை பழைய ஏற்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்; கிறித்துவர்களுக்கு அதன் பின்பு - புதிய ஏற்பாடு; இஸ்லாமியர்களுக்கு - கடைசி ஏற்பாடு. இருப்பினும் அவர்களுக்குள்தான் சண்டையே அதிகம்?! ஆனாலும், ஒரு ஒற்றுமை - மூவருமே தங்கள் மதத்தின்மேல் முழு, ஆழ்ந்த, கேள்விகளற்ற - அதைவிட, கேள்வி கேட்கப்பட்டாலே அதை blasphemy என்று நினைக்கும் அளவிற்கு - நம்பிக்கை; கிறித்துவர்களின் மொழியில் - விசுவாசம், இஸ்லாமியரின் வார்த்தைகளில் - Fidelity.நானும் மேற்சொன்ன மாதிரியே முழுக்கிறித்துவனாக, முழு விசுவாசமுள்ள கத்தோலிக்க கிறித்துவனாக இருந்துவந்தேன். சாதாரணமாக, இளம் வயதில் மதத்தைவிட்டுச் சற்றே விலகியிருந்து, பின் கல்யாணமெல்லாம் ஆகி குழந்தை குட்டி என்று சம்சார சாகரத்தில் மூழ்கி, - இந்துக்கள் சொல்வதுபோல், 'க்ரஹஸ்தன்'' என்ற நிலைக்குப் பிறகு வரும் மாற்றம் போல் - மறுபடியும் கடவுளைச் சரணடைவதுதான் இயல்பு. ஆனால், என் கேஸ் கொஞ்சம் வித்தியாசம். நான் ஏறத்தாழ 40 -43 வயதுவரை என் மதத்தின் மேல் மட்டற்ற நம்பிக்கையும், என் மதக் கடவுள் மேல் பக்தியும் கொண்ட ஒருவனாகவே இருந்து வந்தேன். அப்படியிருந்த நான் ஏன் இப்படி ஆனேன்? அது ஒரு நாளிலோ, சில மாதத்திலோ ஏற்பட்ட மாற்றமில்லை; Theist என்ற நிலையிலிருந்து agnostic என்று என்னை நானே கூறிக்கொள்ளவே பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆயிற்று; பின் athiest என்று என்னை நானே - பலத்த தயக்கங்களுக்குப் பிறகே - கூற மேலும் பல ஆண்டுகள் ஆயிற்று. ஆக, இது மிக மிக தயங்கித் தயங்கி, நின்று நிதானித்து, மெல்ல மெல்ல எடுத்துவைத்த அடிகள். எந்தவித ஆவேசமோ, யார் மீதோ அல்லது எதன் மீதோ ஏற்பட்ட ஏமாற்றங்களினாலோ, கோபதாபங்களாலோ வந்த மாற்றம் இது இல்லை. எனக்கு நானே பரிட்சித்துப்ப்பார்த்து, கேள்வியும் நானே; பதிலும் நானே என்றும், அதோடு, பதிலுக்காக அங்கங்கே அலைந்தும் எனக்கு நானே பதிலளித்து அதன் மூலம் வந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டேன். இது ஒரு evolution - a very slow 'blossoming'! (Evolution என்ற சொல்லுக்கே அதுதான் பொருள்). மற்றவர்களின் சமய எதிர்ப்புக்கொள்கைகள் எதையும் அப்போது நான் என் காதில் வாங்கிக்கொண்டதில்லை. எனெனில், என் கருத்துக்களுக்கு நான் மட்டுமே பொறுப்பாயிருக்கவேண்டுமென்று விரும்பினேன். உதாரணமாக, 'Why I am not a Chrisitian?" என்ற Bertrand Russel எழுதிய புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து முதல் 30 ப்க்கங்களோடு நிறுத்திக்கொண்டேன். ஏனெனில், (prayer) ஜெபம் பற்றி நான் நினைத்ததையே அவரும் கூறுவதாகப்பட்டது. அதோடு, அந்தப் புத்தகத்தின் தாக்கம் என்மீது எவ்வகையிலும் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.'சுயம்பு' என்று வைத்துக்கொள்வோமே!!இந்த பரிணாமத்தைத்தான் மெல்ல உங்களிடம் சொல்ல வந்துள்ளேன். என் தவறுகளைத் திட்டாமலேயே திறுத்துங்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு நீண்ட நெடும் தேடல்... தொடர்ந்த தேடல். முடிவைத்தொட்டு விட்டேன் என்று கூறவில்லை. நான் சென்ற எல்லை வரை உங்களை அழைத்துச் செல்ல ஆசை - ஒரே ஒரு நிபந்தனை; கஷ்டமானதுதான். உங்கள் மனக் கதவுகளைத் திறந்து வைத்துக் கொள்ளுங்களேன்

RAINCOAT

நேற்று இரவு பார்த்த படம் RAINCOAT. O Henry-யின் கதைத் தழுவலாக இந்தியில் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா நடித்தது. மொத்தம் ஆறே ஆறு கதாபாத்திரங்கள் - நாயகன், நாயகி, நாயகனின் அம்மா, நண்பன், நண்பனின் மனைவி, வீட்டுச் சொந்தக்காரன். இதில் நாயகனின் அம்மா, நண்பன் இருவருக்கும் இரண்டு இரண்டு வசனம் இருக்கலாம்; நண்பனின் மனனவிக்கு அரைப் பக்க வசனம் -ஆனாலும் மிகவும் அழுத்தமான, கதையின் மய்யப் புள்ளியைக் காட்டும் வசனம்; வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒன்றரைப் பக்க வசனம். மீதி முக்கால்வாசிப் படம் முழுவதும் நாயகன் ஒரு நாற்காலியில் சிகரெட்டுப் பிடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு கட்டிலில் காலைக்கட்டிக் கொண்டு ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கதைப்படி காலை ஆரம்பிக்கும் கதை இரவோடு முடிகிறது. costume, sets ... இப்படி எந்தச் செலவுமில்லாமல் எடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடித்தது ஆச்சரியாகத்தான் இருந்தது. அவரது glamour-க்கு எந்த அவசியமுமில்லை. படத்தின் கடைசி ஐந்து நிமிடம், அதிலும் தன் நிலைமையைப் புரிந்து கொண்டதால் நண்பனின் மனைவியின் கடந்த கால நினைவுகளைப் புரிந்து கொள்ளும் நாயகன் "திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அவரைச் சந்தித்தீர்களா?" என்று கேட்கும் கேள்வி அழகு என்றால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சொல்லும் பதிலின் ஆழம் ...இன்னொரு பெருமூச்சு ... இப்படியெல்லாம் எப்போது தமிழ்ப் படம் வரும்? அதையும் ரசிக்கும் நிலைக்கு எப்போது நம் தமிழ் ரசிகர்கள் உயர்வார்கள்? (இது பலருக்கு உறுத்தும்; அதுமாதிரி ரசனைதான் உயர்வென்று எப்படிக் கூறப் போச்சுன்னு வந்திராதிங்க'ப்பு