Sunday, November 11, 2007

ஒண்ணுமே புரியலைடா, சாமியோவ்!

ரெண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, வீட்டுக்கொரு மரம் கொடுக்கமுடியாததாலோ என்னவோ, வீட்டுக்கொரு டி.வி. அதுவும் கலர் டி.வி. என்றெல்லாம் சலுகைகள் தேர்தல் வாக்குறுதிகளாக வந்த போது, இந்த வாக்குறுதிகளை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்; இதுவே தி.மு.க.வின் தோல்விக்குக் காரணமாக இருக்கப் போகிறதென்றுதான் என் கணிப்பாக இருந்தது. ஆனால் இந்த இலவசங்களே மக்களுக்கு தேர்தல் களத்தில் மிகவும் பிடித்துப் போன திட்டங்களாகப் போனது. முதலில் கேலிசெய்த ஜெயலலிதாவும் தானும் பதவிக்கு வந்தால் இவையெல்லாவையுமே நிறைவேற்றுவேன் என்று பல்டி அடித்தார்.
எப்பவும் மொதல்ல சொன்னவங்க சொல்லுதான அம்பலமேறும் அப்டின்ற விதிப்படி திமுக அமோக வெற்றி.இந்த அரிசித் திட்டம் எப்படியோ .. பொருளாதார நிபுணத்துவம் எல்லாம் இல்லாத என் போன்ற ஆளுக்கு எல்லோருக்கும் அந்த விலையில் அரிசி தரணுமா அப்டின்றது இன்னும் கேள்விதான்.ஆனால் இந்த டி.வி. திட்டத்தை நினச்சு அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியலை. இது பத்தாதுன்னு பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு சைக்கிள் அப்டின்னு ஒரு திட்டம். இது புதுசு இல்லைன்னாலும் அந்தத் திட்டமும் வேகமா செயல்பட ஆரம்பிச்சது. இதில interesting ஆன விஷயம் என்னன்னா, ரெண்டு மாசத்துக்கு முந்தி இந்த மாதிரி இலவசமா மாணவர்களுக்குக் கொடுத்த சைக்கிள் ஒன்றில் எங்க வீட்டுக்கு கேபிள் 'பையன்' வந்தான். 'என்னப்பா? இந்த சைக்கிள் உனக்கேது? ' என்றேன். 'ரெண்டாயிரம் பெறக்கூடிய சைக்கிள் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவா கிடச்சுது; வாங்கினேன்' அப்டின்னான். 'என்னப்பா, இது படிக்கிற பிள்ளைகளுக்குக் கொடுத்தது எப்படி விற்பனைக்கு வந்தது' என்றேன். 'என்ன சார், விவரமே இல்லாத ஆளா இருக்கீங்க .. சைக்கிள் ஓட்டத்தெரியாத ஆளுக்குக் கொடுத்தா அவன் / அவள் விக்க மாட்டாங்களா? அதோட, ஏற்கெனவே ஒண்ணுக்கு ரெண்டா சைக்கிள் வச்சிருக்க ஆளுக்கு இன்னொண்ணு கொடுத்தா .. மிஞ்சிப் போனா சந்தனம் கூட ... அப்டிங்கிறது மாதிரி .. விக்க மாட்டாங்களா?' என்றான். அதோடு இதே கதைதான் டி.வி.க்கும் என்றான். 'வேணும்னா சொல்லுங்க..
புது கவர்மெண்ட் டி.வி. இறக்கிருவோம்' அப்டின்னான். அதும் இதே கதைதானாம். இருக்கிறவங்களுக்கு இந்தா பிடி இன்னொண்ணுன்னு கொடுத்தா விக்க மாட்டாங்களா?ஒண்ணுமே புரியலைங்க. 5 வருஷத்துக்கு முந்தி ரிட்டையரா ஆகுறதுக்கு கொஞ்ச நாளே இருக்கும்போது வயத்தில பயங்கரமா புளி கரைச்சாங்க. என்னன்னா, கவர்மென்டிடம் காசே இல்லை; அதனால ரிட்டையரா ஆகுற ஆளுகளுக்கு மொத்தமா கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காது; ஒண்ணுக்குப் பாதி காசு; மீதிக்கு பேப்பர் - அதாவது bond கொடுக்கப் போறாங்க அப்டின்னு செம வதந்தி. இதிலேயே ஹார்ட் அட்டாக் வந்த கேசுகள் உண்டு - சீரியஸாதான் சொல்றேன்.
எப்படியோ காசு எல்லாம் முழுசா வாங்கித்தான் ரிட்டையரா ஆனோம், இருந்தாலும் ஒரு ஆறு மாசத்துக்கு மேல போன முதலமைச்சர் புண்ணியத்தில வயத்துல நெருப்புத்தான்.இப்படி இருந்த நமது அரசின் கருவூலம் எப்படி அதுக்குப் பிறகு நிறைஞ்சுது; எங்களுக்கெல்லாம் காசு முழுசா கிடச்சுது. முதலில் முந்திய முதல்மைச்சரால் மறுக்கப் பட்டவைகள் எப்படி அவர் காலத்திலேயே சாத்தியமாயின என்பதெல்லாம் தெரியாது. பலி போடாதே அப்டின்னு ஒரு சட்டம் வந்தது; வந்த வேகத்தில போயி, நீ ஆடு வேணும்னாலும் வெட்டிக்க; புலிய வேணும்னாலும் வெட்டிக்க; இல்ல, தலையில் பாறாங்கல்லைப் போட்டுக்கிட்டு சாமி கும்பிட்டுக்கன்னு ஆயிப் போச்சு. அரசு ஊழியர்களுக்குப் பைசா கிடையாது; அரசிடம் காசே இல்லைன்னு முதல்ல. தேர்தல் நெருங்கும்போது கஜானா திறந்து முதலமைச்சர் வள்ளலானார்.
ஆனால் அதுக்குப் பிறகு வந்த இப்போதைய அரசோ சும்மா லெஃப்ட், ரைட்டுன்னு காச அள்ளி வீசுது. ரெண்டு ரூபாய்க்கு அரிசி, சும்மாவே ஆளாளுக்கு டி.வி. அதுவும் கலர்ல, சைக்கிள் பள்ளிப் பிள்ளைங்களுக்கு, பஸ் பாஸ் கல்லூரி மாணவர்களுக்கு, ஆளில்லாத ரயில்வே கேட்டில் அவ்ளோ பெரிய ரயில் வண்டி வர்ரது தெரியாம, கண்ணை மூடிக்கிட்டு வண்டி ஓட்டி வந்து அடிபட்டா செத்துத்தொலைஞ்சா, செத்தவங்க, அடிபட்டவங்க பேர்ல என எல்லாத்துக்கும் காசு, அமெரிக்காவில் இறந்த பேராசிரியரைப் பார்க்க போன பெருங்கூட்டத்துக்கு விமான 'பாஸ்', - இப்படி, விழுந்தா காசு; எழுந்தா காசுன்னு இறைக்கிறத பார்த்தா ஒண்ணுமே புரியலையே.
காசே இல்லாம ஒரு முதலமைச்சர் ஆட்சி நடத்துறேன்னு ஒரு கதை முதலில். அடுத்த வந்திருப்பவரோ - திருநெல்வேலி வார்த்தை ஒன்று உண்டு - மானாங்கணியா காசை இறைக்கிறார். இலவச மயம் என்று ஒரு பக்கம் இருந்தது பத்தாதுன்னு இன்னொரு "நல்ல" திட்டம்! தமிழில் பெயர் வைத்தால் சினிமாவுக்கெல்லாம் வரியில் தள்ளுபடி. அடப்பாவிகளா அப்டின்னுதான் எனக்குத் தோணியது.
படத்து நீளத்தைக் குறைத்தால் வரி விலக்கு என்றால் அநாவசிய டப்பா டான்ஸுகள் இல்லாம நல்ல படம் வந்திராதான்னு ஒரு நப்பாசை உண்டு. ஆனா அதெல்லாம் படம் எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோ,பெயர் மட்டும் தமிழில் வச்சுக்கோ அப்டின்னா அது என்ன புத்திசாலித்தனமோ? ராமதாஸுக்கு செக் வச்சதாக நினைப்போ என்னவோ? தமிழுக்கும் தொண்டு "ஆத்தி"யாச்சி; ராமதாஸுக்கும் ரவுண்டு கட்டியாச்சின்னு ஒரு நினைப்புன்னு நினைக்கிறேன்.கருத்துக் கணிப்பு விவகாரத்தைக் கையாண்டதா நினச்சா உண்மையிலேயே எனக்கு ஒண்ணும் புரியலை. நமக்கு வெளிப்படையா தெரியறதை விடவும் ஆழமா அந்தக் குடும்பத்துக்குள்ள என்னென்னமோ நடக்கிறது மாதிரிதான் தோணுது.
பிறகு என்னங்க... மூணு பேரு செத்ததுக்கு ஒரு மண்ணும் நடக்கலை. அந்தப் பக்கம் ஆளுக்கு ரெண்டு லட்சம்; முடிஞ்சிது கதை. ஆனால் அரசியல் அரங்கில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். அந்தக் காலத்தில R.S.மனோகர் அப்டின்னு ஒரு பெரிய நாடகக்காரர் இருந்தார்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். டக்கு டக்குன்னு சீன்கள் எல்லாம் மாறி மாறி வரும். ஒரு நிமிஷம் தேவலோகம்னா அடுத்த நிமிடமே இன்னொரு நாகலோகம்னு காமிப்பார் நாடக மேடையில்.
அவ்ளோ வேகம்; அவ்ளோ டெக்னிக். ஆனாலும் இப்போ ஒரு மாசத்தில நடந்த திரை மாற்றங்கள் முன்னால் அதெல்லாம் தூசுதான், போங்க!இதையெல்லாம் தாண்டி இப்போ எனக்கு தலைசுத்துறதுக்குக் காரணம் நேத்து நடந்ததுதாங்க. 'பாவி' மனுஷன் ஒருத்தர் கேஸ் போட்டு, நடுவில 'நல்ல' மனுஷங்க சிலர் தடை கேட்டு கேஸ் போட்டு, எப்படியோ ஒரு நல்ல விஷயம் நடந்திருச்சின்னு நினச்சேன் - இந்த ஹெல்மட் கட்டாயமா போடணும்னு சட்டம் போட்டதை. சட்டம் போட்டதும் காசு 20 கோடி கைமாறிடிச்சி; அதான் சட்டம் பாய்ஞ்சிருச்சி அப்டின்னு வேற சொன்னாங்க. அது எப்படி சரியா எவ்வளவு பணம் அப்டிங்கிறதெல்லாம் இப்படி சொல்றங்களுக்குத் தெரியுமோ? அது போகட்டும்.
மக்கள் மாஞ்சி மாஞ்சி வாங்கினாங்க. முதல் நாள் தெருவில் இருசக்கர வண்டியோட்டங்களே கொஞ்சம் குறைவா தெரிஞ்சிது. ஹெல்மட் போட்டுத்தான் நிறைய பேர் வந்தாங்க. ஆனால் அடுத்த நாளே நம்ம முதல்வரின் தாயுள்ளம் கனிஞ்சிருச்சி. மக்களை போலீஸ்காரர்கள் கஷ்டப் படுத்த வேண்டாம் அப்டின்னு சொல்லிட்டார். இது போதாதா நம்ம மக்களுக்கு. உள்ளதே ஹெல்மட் போட்டா தலைவலி, கழுத்து வலி, வழுக்கை அது இதுன்னு ஒரு பாட்டம் மக்கள் அழுதாங்க. கண்ணீரைத் துடைக்க நம் முதல்வர் வந்திட்டதால் இனிமே அவ்வளவுதான் - சங்கு ஊதியாச்சி, அந்த சட்டத்துக்குதான். வேற ஏதாவது நினச்சுக்காதீங்க. மேஏ 1-ம், தேதி 95% ஆளுங்க ஹெல்மட் போட்டு வந்தாங்க.
இன்னைக்கி காலையில் 5 விழுக்காடுதான் வாங்கிட்டோமேன்னு ஹெல்மட்டோடு வர்ராங்க. சட்டமுன்னு போட்டா அதை அமுல் படுத்தி ஒழுங்கா மக்களை நடத்துறதுக்குப் பேருதான் govern பண்றது அப்டிங்கிறது. அதைச் செய்ய முடியாதவங்க நடத்துறதுக்கு, இப்படியெல்லாம் பண்றதுக்குப் பேரு என்னவோ? முந்திய ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டுமென ஒரு உத்தரவு போட்டு, எல்லோரையும் அந்த உத்தரவுக்குப் பணிய வைத்ததை நினைத்து இப்போது பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இதைத்தான் நான் ஏற்கெனவே என் பதிவுகளிலும், ஓரிரு பின்னூட்டங்களிலும் சொன்னேன்: 1. - அர்த்தமுள்ள ஒழுங்கான சட்டங்கள் இயற்றப் பட வேண்டும்.2. - மக்களுக்கு சட்டங்களை மதிக்கிற புத்தி - respecting the law of the land - வரணும்.3. - மக்களுக்கு அந்த புத்தி வர்ரதுக்கு சட்டங்களை மீறுபவர்களுக்குரிய தண்டனைகள் கட்டாயம் தரப் படணும்.இதில் முதல் விஷயமே தகராறு.
முதல் நாள் ஹெல்மட் போடுன்னு சட்டம்; ரெண்டாம் நாள் அய்யோ பாவம் மக்கள் அப்டின்னு இரக்கம். முதல் நாள் அனுமதியில்லாத கட்டிடம் இடிப்புன்னு பேப்பர்ல பெருசா செய்தி. நாலு நாள் கழிச்சிப் பார்த்த எல்லாமே as it were தான். இப்படி இருந்தா, நமக்குத்தான் அப்புறம் சட்ட திட்டங்களில் எப்படி நம்பிக்கை வரும். அப்படியே ஏதாவது ஒரு சட்டம் போட்டாலும் அதை நிறைவேற்ற வேண்டிய government machineries பற்றி கேட்கவே வேண்டாம். சிக்னல் லைட் இருக்கிற இடத்தில நிற்கிற தாணாக்காரர்களில் யாராவது ஒருவராவது, பச்சை விளக்கு விழுந்தாதான் வண்டிகள் புறப்படணும்னு சொல்லி பார்த்திருக்கீங்களா? நாலைஞ்சு வினாடி இருக்கப்பவே போங்கப்பா அப்டின்னு கைய காமிச்சிருவார்.
இந்தச் சின்ன விஷயத்தில் இருந்து பெரிய விஷயம் வரை அப்டிதான். இங்கு யாருக்கும் அதைப் பற்றிக் கவலையில்லை.ஏனிப்படி நடக்குது? ஏன் நம்மை ஆள்பவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்? நாம் எல்லோருமே சொல்லி வச்சது மாதிரி ஏன் இப்படி இருக்கிறோம்? உருப்பட விரும்பாத நாம் மோசமா? நம்மளை உருப்பட விடாத நம் அரசுகள் மோசமா? எப்படியோ, நாம் உருப்பட்ட மாதிரிதான். Do we deserve only such people to rule us? ஒருவேளை இப்படி இருக்குமோ?
எம்.ஜி.ஆர். காலத்திற்குப் பிறகு தி.மு.க. - அ.தி.மு.க. இரு கட்சிகளையுமே நாம் மாற்றி மாற்றித்தான் தேர்ந்தெடுக்கிறோம். போன தி.மு.க. ஆட்சி கொஞ்சம் நேர்மையாக, வெளிப்படையாக நடந்ததாக எனக்கு ஒரு கணிப்பு. கலைஞர் தனக்கும் தன் கட்சிக்கும் நல்ல பெயர் வாங்கிவைத்து விட்டு விலக நினைக்கிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படி நல்ல முறையில் ஆட்சி செய்தாலுமே அடுத்த முறை அவருக்கு மறுபடி மகுடம் சூட்டாமல் ஜெயலலிதாவுக்குச் சூட்டினோம்.
ஆகவே இந்த இரு கட்சிக்காரர்களுக்கும் புரிஞ்சி போச்சு. எப்படியும் மாறி மாறிதான் மக்கள் ஓட்டுப் போடப் போகிறார்கள்; ஆகவே இருக்கும் வரை ஆடிவிட்டுப் போவோம். அடுத்த முறை அடுத்தவர் அதே மாதிரிதான் ஆடுவார். அதற்கடுத்த முறை நமக்குத்தான் என்ற உண்மை / நடப்பு நம் இரு கட்சிகளுக்கும் தெரிந்துவிட்டதென நினைக்கிறேன். அதனால்தான் நம்மைப் பற்றி, நம் எதிர்வினைகள் பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாத, அக்கறையுமில்லாத, தான்தோன்றித்தனமான ஆட்சியாளர்கள் நமக்குக் கிடைத்திருக்கிறார்களோ? நமக்கும் இந்த இரு கட்சிகளை விட்டால் வேறு வக்கில்லாமல் மாற்றி மாற்றி இவர்களையே தேர்ந்தெடுத்துதான் ஆக வேண்டுமா? இருக்கிற ரெண்டுமா இப்படி இருக்கணும்! ஒரே குட்டையில் ஊறின மட்டைன்னு அன்னைக்கே பெருந்தலைவர் சொன்னார் ... இன்னும் எத்தனை காலம்தான் மாறி மாறி வரும் இந்த இரண்டு கட்சி தர்பார் தமிழகத்திற்கு?

சோதிடம்

இந்த சோதிடப் பதிவுகள் அனுமார் வால் மாதிரி நீண்டு போச்சு. ஆனாலும் ஜாதகம் பற்றிய பதிவுகளுக்கு மட்டுமே சிலரின் மாற்றுக்கருத்து பார்க்க முடிந்தது. வாஸ்து, எண்கணிதம் என்று பலர் முனைப்போடு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் சாதகம் மட்டுமே மக்கள் மனத்தில் ஆழமாய் வேரூன்றி இருக்கிறது என்பதையே இது காண்பிப்பதாக எடுத்துக் கொள்கிறேன்.ஏற்கெனவே சொன்னது போல வயதானவர்கள் தங்கள் மேல் நம்பிக்கையிழந்து, சுற்றி நிற்கும் பிரச்சனைகளால் மனம் கலங்கி ஏதாவது ஒரு கொழு கொம்பு கிடைக்காதா என்ற சோகச்சூழலில் இந்த “விஞ்ஞானங்களைத்” தேடிச் செல்வதையாவது ‘அய்யோ பாவம்’ என்ற முறையில் விட்டுவிடலாம். வாழ்வின் இளமைக்காலத்தில் ‘ஓடுற பாம்பை மிதிக்கிற வயசில்’ இளைஞர்கள் எவ்வளவு மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்கவேண்டும்; அதை விட்டு விட்டு பெயரை மாத்தினால் நல்ல வேலை கிடைக்குமா, மோதிரத்தில் கல்லை மாட்டிக் கொண்டால் எதிர்காலம் வெளிச்சமாகுமா என்று இந்த ‘விஞ்ஞானிகள்’ பின்னால் செல்வது சரியான ஒரு வயித்தெரிச்சல் சமாச்சாரமாக எனக்குத் தோன்றுகிறது. இதைப்பற்றிய பதிவுகளில் நான் சில கேள்விகள் எழுப்பியிருந்தேன் - உண்மையாகவே அவைகளுக்குப் பதில் தெரியாத காரணத்தாலயே அவைகளைக் கேட்டிருந்தேன். யாரும் பதில் சொல்லாததால் இன்னும் என் பழைய நிலையிலேயேதான் இருக்கிறேன்.இப்பதிவுகளை எழுதக்காரணமே நம் இளைஞர்களில் பலருக்கும் வாஸ்து, எண் கணிதம், பெயர் மாற்றம் போன்ற பலவற்றில் புதிதாக ஏற்பட்டுள்ள ஈர்ப்பே காரணம். கடந்த இருபது ஆண்டுகளில் இந்த விஷயங்கள் மேல் மக்களுக்கு, அதுவும் இளைஞர்களுக்கு, ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பார்த்த பிறகே அதைப் பற்றி நினைக்க ஆரம்பித்து, இப்பதிவுகளை எழுதலானேன்.வழக்கமாகவே சோதிடத்தில் நல்லது ஏதாவது சொன்னால் அதை அப்படியே யாரும் நம்புவதில்லை - people take it with a pinch of salt. ஆனால் அதுவே கெட்டது நடக்கும் என்றால் மனம் பேதலித்து நிற்பது என்பது சாதாரணமாகப் பார்க்கும் ஒரு விஷயம்தான். கொஞ்ச நஞ்சம் இருக்கும் நம் தன்னம்பிக்கையை பாழடிக்கும் என்று தெரிந்தும் அதில் வீழ்வது புத்திசாலித்தனமாகாது.அடுத்து கடைசியாக சாதகத்திற்கு வருவோம். இதைப்பற்றிய பதிவுகளுக்குத்தான் நம்பிக்கையாளர்கள் சிலர் பதிலளிக்க வந்தனர். நன்றி அவர்களுக்கு. நம்பிக்கையாளர்கள் வழக்கமாகச் சொல்லும் ஒரு விஷயம்: சாதகம் ஒரு கணக்கு; ஆனால் சிலரே அதை மிகச்சரியாக கணிக்கத் தெரிந்தவர்கள். அந்தக் கணக்கு தெரியாதவர்கள் கணிக்கும்போது ஏற்படும் தவறுகளை வைத்து சாதகமே தவறு என்று சொல்வது தவறு என்பது அவர்களின் ஒரு விவாதம். இவ்விவாதத்திற்கு தொப்புளான் சொன்னதை இங்கு மீண்டும் சுட்டிக்காட்டி அதற்குரிய பதிலாகத் தருகிறேன்: கணக்கு சரிதான். கணிக்கிறவர்தான் தப்புன்னா இத்தனை வருசத்தில ஒரு அமைப்பு ஏற்படுத்தி தரப்படுத்தி டாக்டருங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கிறமாதிரி தரவேண்டியதுதான.அது ஆதரவாளர்களுக்கும் நல்லதுதான.திரும்பத் திரும்ப சண்டை போட வேண்டாம்ல.இந்த மாதிரி விஷயத்தில எல்லாம் நிரூபிக்க முடியாதுங்கறது (non falsifiable)வசதியாப் போச்சு. அடுத்து, இந்த சாதக அமைப்புகள் நம் “தலைவிதி” என்றே கொள்வோம். அப்படியாயின் அது கடவுள் கொடுத்த ஒன்றாயின் பின் எதற்கு அந்த அமைப்புகளில் காணும் ‘தோஷங்களுக்கு’ப் பரிகாரங்கள்? கடவுளுக்குக் கையூட்டு கொடுத்து, கிரஹங்களின் ‘தாக்கத்தை’ மாற்றுவதா இது? இந்தப் பரிகாரங்களைப் பற்றிச் சொல்லும்போது, சென்ற பதிவின் பின்னூட்டத்தில் சம்மட்டி சொன்னதை மீண்டும் நினைவு கூர்வது நன்றாயிருக்கும்:“தோசம் கழிக்க மறுபடியும் சாமிக்கிட்ட தான போகனும் !. ஜோதிடத்தை 100% நம்புவர்கள் கூட அவைகளை மாற்றிவிட முடியும் என்று கருதுகிறார்கள், ஆஞ்சினேயருக்கு வட மாலை, சனீஸ்வரனுக்கு எள்ளுசாதம், துர்க்கைக்கு குங்கும பூஜை இப்படி என்னென்னுமோ தகிடுதத்தமெல்லாம் பண்ணிதாங்களே நம்புகிற ஜாதகத்தை பொய்யாக்கிறவர்கள் ஜோசிய நம்பிக்கையாளர்கள் தாம்.” இன்னொரு காரியம்: சாதகம் கணிக்க குழந்தை ‘ஜனித்த’ சரியான நேரம் தெரியவேண்டும் என்பதில் ‘சரியான நேரம் எதுவென்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகளையும் முன் பதிவில் பார்க்கலாம். கருச்சிதைவுக்கு எதிராகக் கருத்து சொல்லும் கிறித்துவ, இஸ்லாம் (மற்ற மதக்கோட்பாடுகள் பற்றி தெரியவில்லை) மதங்களிலும் தாயின் கரு சூல் (fertilization) ஆன உடனேயே அங்கே ஓர் உயிர் தோன்றி விட்டதாகவே கருதுகின்றன. அப்படியாயின் நான் ஞானவெட்டியானிடம் கேட்ட கேள்வி:-சரியான நேரத்தை எடுத்துக்கொண்டு கணித்தால் ஜாதகம் மிகச்சரியாக இருக்கும் - ஒரு சாராரின் வாதம்.-சரியான பிறந்த நேரம் தாயின் கருமுட்டை சினையுறுவது; ஆனால் அது யாராலும் கண்டுபிடிக்க முடியாத விஷயம்.- அப்படியாயின் மற்றபடி பிறந்த நேரம் வைத்துக் கணக்கிடும் - திருக்கணிதத்தையும் சேர்த்தே - எல்லா ஜாதகக் கணிப்புகளுமே தவறாகத்தான் இருக்க வேண்டும்.- எல்லா கணிப்புகளுமே தவறாக இருப்பின். அதனால் யாருக்கு என்ன பயன்? எல்லாமே தேவையற்றதுதானா?- எல்லாமே தேவையற்றதாயின் பின் அது ஏன் காலங்காலமாய் மக்களால் பின்பற்றப் படுகிறது?நறுக்கென்று ஞானவெட்டியான் இதற்குத் தந்த பதில்:அறியாமையைத் தவிற வேறொன்றுமில்லை. ஞானவெட்டியான் மேலும் சொன்னது:எல்லாவற்றிற்கும் மேலாக “எது வரினும் வரட்டும்; எதிர்கொள்வோம். தன்னம்பிக்கையுடன் வாழ்வோம்” என முடிவெடுத்தால் சோதிடர் பக்கமே செல்லவேண்டாம்.”தருமியின் கடைசிக் கேள்வி: மதங்களையும், கடவுளையும் நம்புகிறவர்களே இந்த வகையான விஷயங்களில் ஈடுபாடு காண்பிப்பது எனக்கு கொஞ்சம் அதிசயமாகவே படுகிறது. உங்களுக்கு உண்மையிலேயே நீங்கள் கும்பிடும் தெய்வத்திடம் நம்பிக்கை இருந்தால் இந்த துணை நம்பிக்கைகள் எதற்கு? இதனால் உங்கள் கடவுள் நம்பிக்கையையும், உங்கள் கடவுள்களையும் - அதனால் உங்களையுமே - நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ளவில்லையா?

தொடரும் அநியாயங்கள் - இடப் பங்கீடு

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (06.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதே சமயத்தில் ஷரத் யாதவ் இந்துவில் எழுதிருந்த ஒரு நடுப்பக்கக் கட்டுரையையும் பதிவிட்டிருந்தேன். U.P.S.C. தேர்வுகளில் உயர் மதிப்பெண் எடுத்துத் தேர்வுபெறும் O.B.C., S.C.,/S.T. -களை O.C. quota-வில் காண்பிக்காது விட்டு,(இது முறைகேடானது என்று உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும்) இடப்பங்கீட்டு மோசடி செய்துவந்ததை எழுதியிருந்தேன். இந்த ஆண்டும் தேர்வாளர்கள் தங்கள் திறமையை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்கள். அதனை எதித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கொன்று பதியப்பட்டுள்ளது.

நீங்கள் ஆண்டுதோறும் இப்படி வழக்கு போட்டுக்கொண்டேயிருங்கள்;நாங்கள் எங்கள் மோசடியைத் தொடர்ந்து நடத்திக்கொண்டேயிருப்போம் என்ற நிலை நீடிக்கும்போது நம் சட்டங்கள், சட்டங்களின் காவலான நீதிமன்றங்கள், நீதியை நிலைநாட்ட வேண்டிய அரசு என்று அத்தனை துறைகள் மீதும் நம்பிக்கையில்லாமல் போய்விடுகிறது. எல்லாமே 'அவர்கள்' கையில்; இதில் நாமென்ன செய்ய முடியும் என்ற கையறு நிலைக்குத்தான் வரவேண்டியதுள்ளது. சமூகநீதிக்குப் போராடுவதாகக் கூறும் அரசியல், சமூகக் கட்சிகளாவது இந்த தொடரும் அநியாயங்களுக்கு எதிர்க்குரல் கொடுக்கக் கூடாதா? இந்த தொடரும் அநியாயங்களை யாரும் நிறுத்தவே முடியாதா?

இந்த வழக்கு பற்றிய இன்றைய (14.07.2007) இந்துவில் வந்துள்ள செய்தி:

The petitioners contended that the UPSC continued to flout the Centre’s directives and the Supreme Court rulings, besides the constitutional provisions, by not including successful candidates from reserved categories in the open category.

The petitions said nearly 60 candidates belonging to the open category were unlawfully included in the merit list.

06.06.2006 அன்று நானெழுதிய பதிவில் வழக்கறிஞர் திரு. ப்ரபு ராஜதுரை அளித்திருந்த பின்னூட்டம்:

PRABHU RAJADURAI said…

உங்களில் யாரும் இதை அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியாது. மண்டல் கமிஷன் பரிந்துரையினை ஏற்று மத்திய அரசு பணிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏற்பட்ட பிறகு, இட ஒதுக்கீட்டினையே கேலிக்குறியதாக்கும் ஒரு மோசடி நடைபெற்றது. அதாவது, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அவர்கள் எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அவர்களை பொது வகுப்பில் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கீட்டு பிரிவிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் விளைவு தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவருக்கான ஐம்பது சதவீதம் போக மீதி ஐம்பது சதவீதம் இவர்கள் அல்லாத முற்படுத்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

இப்படி நடக்க முடியுமா என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால், இத்தகைய ஒரு செயலை எதிர்த்து, எனது நண்பர் சென்னையிலுள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் (CAT)ஒரு வழக்கு தொடர்ந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட முழு விபரத்தினையும் தர முடியும். வேடிக்கை என்னவென்றால், இந்த தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கினை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்தது வேறு விஷயம்.



இந்துவில் வந்திருந்த ஷரத் யாதவ் எழுதிய கட்டுரையை 09.07.2006-ல் பதிப்பித்திருந்தேன்.அதில் இது தொடர்பான பகுதி மீண்டும் இங்கே ...


...but the UPSC has continued to deny meritorious candidates of reserved categories the right to join the civil services as general category candidates.


People controlling the UPSC and DoPT are so strongly motivated against the candidates of reserved categories that they can go to any extent in their adventure to block the entry of reserved categories in the civil services.

17 comments
அட தமிழ்ப்பட இயக்குனர்களே ...
அரை மணி நேரத்துக்கு முன்னால விசிடியில் ஒரு படம் பார்த்தேன்.மலையாளப் படம். படம் முடிஞ்ச பிறகும் அந்த இடத்திலேயே ஆணியடிச்சது மாதிரி உட்கார்ந்திருந்தேன்.ஏறக்குறைய இருபது இருபத்தஞ்சு நிமிஷம். ஒண்ணுமே செய்யத் தோணலை.என்னென்னமோ மனசுக்குள்ள ஓடியது.கஷ்டமா இருந்தது.மனசு ரொம்ப பாரமா ஆயிரிச்சி.வசனங்கள் அனேகமா எதுவுமே புரியவில்லைதான்.கேரளாவின் எந்தப் பகுதின்னும் தெரியலை.Backwaters உள்ள அந்தப் பகுதி மிகவும் புதுசா தோன்றியது. அழகான இடம்.நல்ல மக்கள்.இடத்தைப் போலவே மக்கள் மனசுக்குள் எல்லாம் ஈரம்.இருட்டை இருட்டாக காண்பிக்கும் படப் பிடிப்பு.நடிப்பு, கதை, படப்பிடிப்பு - சுத்தமாக எதிலும் மிகையில்லை.cinematic, dramatic அப்டின்னு எல்லாம் சொல்லுவாங்களே.அவைகளுக்கு இப்படத்தில் இடமே இல்லை.எப்படி இப்படி படம் எடுக்கிறார்கள்?இந்த மாதிரி படம் எடுக்கும் துணிச்சலைத் தரும் மக்களை எப்படிப் பாராட்டுவது?இப்படியெல்லாம் நினச்சிக்கிட்டு இருந்தப்போ ... நமது தமிழ்ப்பட டைரடக்கர்கள் ஒவ்வொருவராக மனசுக்குள் வந்து நின்றார்கள். அடச் சீ! போங்கடான்னு சொல்லணும்போல இருந்தால் அது என் தப்பா?


குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு கேரளாவிற்கு வந்து சேர்ந்த மொழி தெரியாத சிறுவன்.மம்முட்டியின் குடும்பத்தோடு ஐக்கியமாகிறான்.சட்டதிட்டங்களின் குறுக்கீடு.அதன்படி அவன் குடும்பத்தைத் தேடி பையனோடு மம்முட்டி குஜராத் பயணம்.அழிந்து உருக்குலைந்த வீடு.அனாதையான சிறு பிள்ளைகளோடு பையன் சேர்க்கப் படுகிறான்.அறியாச் சிறுவனின் மனத்தில் குடும்பம் வந்துவிடும் என்ற நம்பிக்கை.அந்த நம்பிக்கையில்லாமல் பையனை விட்டுவிட்டு வரும் மம்முட்டி.சமீபத்தில் பார்த்த சில ஈரானியப் படங்களைப் பார்த்து(Where is my friend's house?) பெருமூச்சு விட்டதுண்டு.இப்படியெல்லாம் என்றைக்கு நம்மூரில் படம் எடுப்பார்கள் என்று நினத்ததுண்டு.பக்கத்தூரிலாவது எடுத்திருக்கிறார்களே.மலையாளப் படங்களின் உச்சங்களைப் பார்த்து மலைத்தது உண்டு.இதோ இன்னொரு படம்.படப் பெயர்: காழ்ச்சா.Tag line Edge of Love இயக்குனர்: Blessyநடிப்பு: மம்முட்டி ...நம்ம ஊரு நிலைமைக்கு யார் காரணம்? நிச்சயமா நம்மை மடையர்களாக நினைத்து (புரிந்துகொண்டு..)படம் எடுக்கும் நம் டைரடக்கர்களா? என்ன மசாலா கொடுத்தாலும் விசிலடிச்சி படம் பார்க்கும் நாம்தானா? இதையும் தாண்டி நம் ஊடகங்கள் ... அடடா, மலைக்கோட்டை படத்தின் முன்னோட்டம் பார்க்கும்போதே படத்தின் அருமை புரிந்துவிடுகிறது.

ஆனால், தமிழ்நாட்டின் நம்பர் 1 ஆ.வி.யில் அதற்கு நூத்துக்கு நாற்பத்து ஒன்று. தாராளப் ப்ரபுகள் .. சில வாத்தியார்கள் மாதிரி .. நிறைய மார்க் போட்டுட்டா பசங்கட்ட இருந்து எந்த தொல்லையும் இருக்காதே .. என்னமோ நடக்குது ...
நேற்று இரவு பார்த்த படம் RAINCOAT. O Henry-யின் கதைத் தழுவலாக இந்தியில் அஜய் தேவ்கன், ஐஸ்வர்யா நடித்தது. மொத்தம் ஆறே ஆறு கதாபாத்திரங்கள் - நாயகன், நாயகி, நாயகனின் அம்மா, நண்பன், நண்பனின் மனைவி, வீட்டுச் சொந்தக்காரன். இதில் நாயகனின் அம்மா, நண்பன் இருவருக்கும் இரண்டு இரண்டு வசனம் இருக்கலாம்; நண்பனின் மனனவிக்கு அரைப் பக்க வசனம் -ஆனாலும் மிகவும் அழுத்தமான, கதையின் மய்யப் புள்ளியைக் காட்டும் வசனம்; வீட்டுச் சொந்தக்காரனுக்கு ஒன்றரைப் பக்க வசனம். மீதி முக்கால்வாசிப் படம் முழுவதும் நாயகன் ஒரு நாற்காலியில் சிகரெட்டுப் பிடித்துக்கொண்டிருக்க, பக்கத்தில் ஒரு கட்டிலில் காலைக்கட்டிக் கொண்டு ஐஸ்வர்யா அமர்ந்திருக்க, இருவரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். கதைப்படி காலை ஆரம்பிக்கும் கதை இரவோடு முடிகிறது. costume, sets ... இப்படி எந்தச் செலவுமில்லாமல் எடுத்த படத்தில் ஐஸ்வர்யா நடித்தது ஆச்சரியாகத்தான் இருந்தது. அவரது glamour-க்கு எந்த அவசியமுமில்லை. படத்தின் கடைசி ஐந்து நிமிடம், அதிலும் தன் நிலைமையைப் புரிந்து கொண்டதால் நண்பனின் மனைவியின் கடந்த கால நினைவுகளைப் புரிந்து கொள்ளும் நாயகன் "திருமணத்திற்குப் பிறகு நீங்கள் அவரைச் சந்தித்தீர்களா?" என்று கேட்கும் கேள்வி அழகு என்றால், அதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் சொல்லும் பதிலின் ஆழம் ...இன்னொரு பெருமூச்சு ... இப்படியெல்லாம் எப்போது தமிழ்ப் படம் வரும்? அதையும் ரசிக்கும் நிலைக்கு எப்போது நம் தமிழ் ரசிகர்கள் உயர்வார்கள்? (இது பலருக்கு உறுத்தும்; அதுமாதிரி ரசனைதான் உயர்வென்று எப்படிக் கூறப் போச்சுன்னு வந்திராதிங்க'ப்பு!)அது போகட்டும் ...இப்பதிவு இந்தப் படத்தைப் பற்றியதல்ல. படம் பார்த்தேன். தூங்கப் போனேன். உடனே தூங்கியும் விட்டேன். இரவெல்லாம் உடல் நன்றாகவே தூங்கியது. விழித்திருந்தது எது - அது மூளையா, மனமா - தெரியவில்லை. ஒரே ஒரு விஷயத்தைச் சுற்றிச் சுற்றி அந்த "அது" -மூளையோ, மனசோ (இனி அதை "அது" என்று சொல்லிவரப் போகிறேன்.)- தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. அட! இயங்கி வந்ததோ என்னவோ சரிதான்; ஆனால், 'அது' இயங்கி வந்தது இரண்டே இரண்டு ஆங்கிலச் சொற்களைச் சுற்றி சுற்றிதான். allure & allude என்ற இரண்டு சொற்களைச் சுற்றிச் சுற்றியே 'அது' வந்ததுதான் ஏனென்று தெரியவில்லை. இந்த இரு வார்த்தைகளுமே பார்த்த படத்துக்கோ முந்திய பகலில் நடந்த நிகழ்வு எதற்குமோ தொடர்பில்லா வார்த்தைகள். பின் ஏன் இந்த இரு வார்த்தைகளை மட்டும் 'அது' சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்?allure = The power to attract through personal charmallude = Make a more or less disguised reference to இதிலும் பல கனவுலகத்திற்கேயான பல பின்புலங்களில் இந்த வார்த்தைகளை, அதன் பொருளைத் தேடித் தேடி 'அது' போகின்றது. காடு, மேடு, மலைமுகடு என பல இடங்களில் சஞ்சரித்ததாகத் தோன்றியது. இரு சொற்களுக்குமே பொருள் எனக்கு /அதற்கு (?) நன்கு தெரியும். இருப்பினும் கனவா அல்லது நனவா அதில் நான் பொருள்தேடி அலைகிறேன். முதல் சொல்லுக்குப் பொருளும் அந்தச் சொல்லை வைத்து வாக்கியங்களும் அமைக்கிறேன். இரண்டாவது சொல்லுக்குப் பொருள் சொல்கிறேன். ஆனால் 'எதுவோ' அதை மறுக்கிறது. அச்சொல்லை வைத்து வாக்கியம் அமைக்க முயலாது தடுமாறுகிறேன். அந்தக் கோபத்தில் ஒரு மலையுச்சியில் இருந்து எதையோ ஓங்கி உதைத்துத் தள்ளுகிறேன். அனேகமாக நான் உதைப்பது அந்த வார்த்தை 'allude'- யைத்தான் என்று நினைக்கிறேன். நான் மலை முகட்டுக்கு இந்தப் பக்கமிருந்து உதைக்க அந்தப் பக்கம் போய் அது விழுகிறது. மலைமுகடு பனிபடர்ந்து வெள்ளை வெளேரென்று இருந்ததாக நினைவு. ஜோலி முடிந்தது என்று கைகளைத் தட்டு விட்டுக்கொண்டு திரும்புகிறேன். பின்னால் ஏதோ சத்தம். திரும்பிப் பார்த்தால் மீண்டும் 'allude'! இந்தப் போராட்டம் துவந்த யுத்தமாகவே இரவு முழுவதும் நடந்தது போல் நினைவு.வழக்கம் போலவே 7 மணிக்கு விழிப்பு வர, இன்று தங்கமணிக்கு ட்ரைவர் வேலை பார்க்கத் தேவையில்லை என்ற நினைவு வரவும் மீண்டும் தூங்க முயன்றேன். தூங்கினேனா, இல்லை கனவுகளில் இருந்தேனா என்பது தெரியாத ஒரு நிலை. இரவில் வந்த இரு வார்த்தைகளுகே மீண்டும் வந்து விளையாட்டு காண்பித்தன. இப்போது அரைகுறைத் தூக்கம் என்பதாலோ என்னவோ இரவில் 'அது' செய்த விஷயங்கள் மீண்டும் நினைவுக்கு ஒவ்வொன்றாய் வர அதை முன்னிலிருந்து பின்னாகவும், பின்னாலிருந்து முன்னாகவும் நினைவு படுத்த முயன்றேன். ஏனோ அப்போது பின்நவீனத்துவம் என்பது மண்டைக்குள் எட்டிப் பார்த்தது. இதுதான் பின்நவீனத்துவமோ என்று ஒரு கேள்வியும், இதுதான் அது என்று ஒரு பதிலுமாக ஒரு சேரத் தோன்றியது.* இப்படி யாருக்காவது வெறும் வார்த்தைகள் - வார்த்தைகள் மட்டுமே - கனவில் வந்திருக்கின்றதா?* முன்பின் தொடர்பில்லாமல் இரு வார்த்தைகள் கனவில் வந்து வதைத்ததேன்?* அதுவும் why did allude elude so much?*** பின்குறிப்பு: இப்பதிவை சுகுணாவோ, அய்யனாரோ அவர்கள் நடையில் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் என்று தோன்றுகிறது - சீரியசாத்தான் சொல்கிறேன்!