Monday, February 25, 2008

ஆனந்தவிகடனின் போக்கு - ஒரு வாசகனின் பார்வை

மூன்று ரூபாய்க்கு ஆனந்தவிகடன் விற்ற காலத்திலிருந்து, விகடன் வாசித்து வருகிறேன். அவ்வப்போது விகடனின் தோற்றம் மற்றும் உள்ளீடு மாறும். ஒவ்வொரு மாற்றமும் முன்பில்லாத அளவுக்கு இதழை பொலிவுபடுத்தியே வைத்திருந்தது என்பதில் ஐயமில்லை. புத்தம்புதிய பகுதிகள், பரீட்சார்த்த முயற்சிகள் என விகடனின் அனைத்து அவதாரங்களும் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடப்பட்டவையே. மதன், சுஜாதா, வைரமுத்து ஆகியோரின் பங்கு மிகவும் சிறப்பாக இருந்த நேரத்தில் மற்ற பகுதிகளும் இவற்றிற்கு இணையாக வரவேண்டுமென்று மிக சிரத்தையோடு எழுதப்பட்டன. விகடனின் ஜோக்குகளுக்கென்று இன்றும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கின்றதென்பது உண்மை.
விகடனிலிருந்து மதன் விலகியதும், சீனிவாசன் பொறுப்பேற்றதும் மிக முக்கியமான நிகழ்வுகளாக நான் பார்க்கிறேன். ஆயினும் மதன் விலகியதை மிகவும் நாகரிகமாக பாலசுப்ரமணியன் கையாண்டார். அவருடைய “வணக்கம்” கட்டுரை விகடனின் வாசகர்களின் மனதில் இன்றும் நிற்கிறது. அந்த நிகழ்விற்கு பின்னர் மதன் “விண் நாயகன்” எனும் இதழைத்தொடங்கி (“இந்தியா டுடே” சைஸில்) நடத்த, அந்த பத்திரிகையைப்பற்றி குமுதம் அரசு பதில்களில் “எழுந்து நின்று பாராட்டி வரவேற்பதாக” எழுதப்பட்டது. ஆயினும் அந்த இதழ் சொற்ப நாட்களில் நின்றுபோயிற்று. இவை நடந்து கொண்டிருந்தபோதிலும் மதன் தன் “ஹாய் மதன்” பகுதியை நிறுத்தாமல் விகடனில் எழுதிக்கொண்டுதானிருந்தார். மதன் விகடனிலிருந்து விலகிய சூட்டோடு குமுதத்தில்கூட ஒரு கட்டுரைத்தொடர் எழுதினார் (பெயர் நினைவிலில்லை).
விகடனில், தலையங்கம் மற்றும் கார்ட்டூன் இரண்டு பக்கங்களில் வரும். சில காலம் மதனின் கார்ட்டூன் இல்லாமலேயே விகடன் வந்ததாகக்கூட நினைவு. பின்பு ஹரனின் கார்ட்டூன்கள் முழுப்பக்க அளவில் ஆசிரியரின் ஒரு பக்க கடிதத்தோடு வரத்துவங்கின. இது கிட்டத்தட்ட இரண்டாவது தலையங்கம் மற்றும் இரண்டாவது முழுப்பக்க கார்ட்டூனாகவே அமைந்தது. மதனை முழுமையாக விலக்கிவிட இயலாத தன்மையாலோ, அடுத்த ஸ்டெப்னி போன்று ஹரனை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்ற உந்துதலினாலோ இது நடந்திருக்கலாம். இது விகடனின் ஆசிரியர் குழுவின் முடிவாக இருக்கலாம். அது நமக்குத் தேவையில்லை. ஆயினும் கார்ட்டூன் ஸ்பெஷலிஸ்ட்டாக விகடன் கொண்டாடிய மதன் இருக்கையிலேயே, இன்னொருவரின் முழுப்பக்க கார்ட்டூனை தொடர்ந்து வெளியிடுவது மதனுக்கு எப்படிவொரு அசூசையான உணர்வைக் கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப்பார்த்தார்களா என்று தெரியவில்லை.
ஹாய் மதனும் இப்போது நான்கு பக்கங்களில் வருவதில், இரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் புகைப்படங்கள் (பெரும்பாலும் கவர்ச்சிப் படங்கள்) எடுத்துக்கொள்கின்றன. கல்லூரிக்காலத்தில் மதனுக்கு கேள்வி எழுதிப்போட்டு விகடனை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த வாசகன்தான் நான். இப்போது இந்நிலையைப் பார்க்கையில் வருத்தமாகத்தான் இருக்கிறது.
மேலும் சமீபத்திய ஞாநி மற்றும் ஜெயமோகன் விவகாரங்களில், ஆனந்த விகடனின் நிலைப்பாட்டினை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இது இப்படித்தான், இவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று ஆனந்தவிகடனையும் அதே தட்டில் வைத்து அளந்து பார்த்துவிட முடியவில்லை. ஆனந்தவிகடனின் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையோ அல்லது ஆனந்தவிகடன் என் மீது செம்மைப்படுத்தியிருந்த நம்பிக்கையோ தான் என்னுடைய இந்த சிந்தனைக்குக்காரணம் என்று நினைக்கிறேன்.
மேலும் சமீபத்திய ஆனந்தவிகடனின் கவர்ஸ்டோரிகளும் யூகத்திலான விஷயங்களைக்கொண்டே எழுதப்படுகின்றன. உதாரணம் 1 - “ஷங்கர் இயக்கத்தில் ரோபோவில் அஜீத் தான் நடிக்கிறார் - பேசி விட்டார்கள் - அந்த வட்டாரம் சொல்கிறது - கோடம்பாக்கம் பற்றிக்கொண்டு திகுதிகு வென்று எரிகிறது” - என்கிற ரீதியில் ஒரு அட்டைப்படக் கட்டுரை பரபரப்பாக வெளியானது. மற்ற பத்திரிகைகளில் வராத ஒரு விஷயத்தை தான் முந்தித் தந்து விட்டோம் என்று பறைசாற்றத்தான் இந்த அட்டைப்பட கட்டுரை. ஆனால் நடந்த கதையோ வேறு.
சமீபத்திய விகடனின் அட்டைப்படக் கட்டுரையும் ( “வயசுக்குத் தகுந்த வேஷம்தான் போடணும்!” - அமிதாப் வழியில் ரஜினி) யூகங்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பில் சொல்லப்பட்ட விஷயத்தைப்பற்றி சம்பந்தப்பட்டவர்கள் பேசாத நிலையிலும் கிராபிக்ஸ் செய்யப்பட்ட இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு இந்த கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. விகடன் ஆசிரியர் குழு நம்முடைய தமிழ் ப்ளாக்குகளை சமீபகாலமாக படிக்க ஆரம்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். கவர்ச்சியான தலைப்பு வைத்து விட்டு அதைப்பற்றி பேசாமல் எழுதப்படும் பதிவுகளின் பாதிப்பாகத்தான் இந்த கட்டுரை வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.
ஆனந்தவிகடனின் தரம் இறங்கி வந்திருப்பதாகவே என் எண்ணத்தில் தோன்றுகிறது. இனியும் என்னால் முன்பு போல ஆவலாவலாக விகடனைத் தேடிப் பிடித்து வாங்கி வரி விடாமல் ஒவ்வொரு படைப்பையும் படிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். இதை எழுதுகையில் கூட ஒரு சொல்லமுடியாத வலியை உணர்கிறேன்.

No comments: