Friday, November 23, 2007

மாநாட்டு வேலைக்குப் போகணும்...

இன்னைக்கு ராத்திரி மதுரை போறேன். ஏன்னு கேக்றீங்களா?நேத்து ராத்திரி நல்லா தூங்கின பிறகு யாரோ எழுப்பினாங்க. யாருன்னு கேட்டேன். நம் எதிர் கால முதல்வர், கறுப்புச் சிங்கம், மதுர கீரத்துரை அரிசி மில்லின் அன்புப் புதல்வன், நம்ம கேப்டனின் மச்சான் என்றார், வந்தவர். என்ன வேணும்னேன். 'நீங்க'தான் அப்டின்னார். எனக்கு ஒண்ணும் புரியலை. பிறகுதான் விதயத்துக்கு வந்தார். 'நம்ம கட்சிக்கு தமிழ்மண ப்ளாக் உலகத்துக்கு கொ.ப.செ.வாக நம்ம கேப்டன் உங்களை தெரிஞ்செடுத்திருக்கிறார்' என்றார் வந்தவர். உடனே உக்காரச் சொல்லி, காப்பி பலகாரம் கொடுத்து உபசரிச்சேன்.'என்னங்க இப்படி, எனக்கு என்ன தெரியும்னு இப்படி ஒரு பெரிய பொறுப்பை கேப்டன் குடுத்துட்டார்'னு கேட்டேன்.எல்லாம் அப்டி அப்டிதாங்க. இப்ப, என்ன தெரியும்னு நீங்க ஒரு ப்ளாக் ஆரம்பிச்சீங்க? html...ip number...graphics...இப்படி ஏதாவது தெரிஞ்சா ஆரம்பிச்சீங்க. ஒரு லின்க் கொடுக்க தெரியுமா உங்களுக்கு? சுட்டி தெரியும்; கீ போர்டு தெரியும். இத வச்சுக்கிட்டே ஏதொ நீங்க ப்ளாக்-பொழப்ப ஓட்டல? இப்ப பாருங்க உங்களுக்கும் திட்டி திட்டி வாசிக்கிறதுக்கோ, இல்ல, வாசிச்சி வாசிச்சி திட்றதுக்கோன்னு நாலு ஆளுக இல்லியா? சிலரு + வேற போடுறாங்களாமே, இல்லியா? அதுமாதிரிதாங்க இதுவும். அதல்லாம் சமாளிச்சுப்புடலாம்; கவலையே படாதீங்க. கேப்டனுக்கு நம்ம மதுர ஆளு வேணும்னு ஆயிப்போச்சு. ஏன்னா, அவரு ஆஸ்தான அலங்காநல்லூர் ஜோசியரு இதுக்கு ஒரு மதுர ஆளுதான் போடணும்னு சொல்லிட்டார்லா' அப்டின்னு சொன்னதும் எனக்கும் ஒரு 'இது' வந்திரிச்சி.'சரீங்க, நான் என்ன பண்ணனும்னு கேட்டேன்.'இன்னும் இரண்டு மூணு நாள்ல நல்ல நாள், நல்ல நேரம் பாத்துட்டு கேப்டன் உங்க பேரை அதிகார பூர்வமாய் அறிவிச்சுடுவார். அதுக்குப் பிறகு நீங்க மள மளன்னு வேலய ஆரம்பிச்சுருங்க' அப்டின்னார் மச்சான், I mean, கேப்டனோட மச்சான்.'சரி'ன்னு எந்திரிச்சி 'எல்லாம் பாத்துக்கங்க; தமிழ் ப்ளாக்கர்க ஓட்டு ஒண்ணுகூட வெளிய போயிரக்கூடாது; பாத்துக்கங்க. அதுக்கு நீங்க தான் பொறுப்பு. அதுக்கு என்ன வேணும்னு முதல்ல சொல்லிடுங்க; எல்லாம் கவனிச்சுடுவோம்'னார். அந்தக் 'கவனிச்சுடுவோம்'னு சொன்னதுமே எனக்கு மூளை வேல செய்ய ஆரம்ப்பிச்சிருச்சி.புறப்பட்டவர் சடாரென திரும்பி 'இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கு. மள மளன்னு வேல ஆரம்பிச்சிருங்க' என்றார். 'என்ன இரண்டு வாரத்தில'ன்னு கேட்டேன். கொஞ்சம் கோவம் வந்திருக்கும்போல. இருக்காதா பின்ன. மெனக்கெட்டு என்ன கொ.ப.செ. வா போட்ருக்காங்க. அவரு சொன்ன பிறகுதான் 'நம்ம கட்சி' மாநாடு மதுரல நடக்க போற விதயம் ஞாபகத்திற்கு வந்திச்சு. நான் ஒரு பெரிய மொடாக்குதான்; நம்ம கட்சி, நம்ம ஊர்ல நடக்கப் போகுது; நான் எப்டி அத மறக்கலாம். 'சாரி'ங்க'ன்னு சொல்லிட்டு 'இப்பவே ஆரம்பிச்சிடலாம்'னேன்.'உடனே நம்ம ஊருக்கு கிளம்புங்க. மாநாட்டு வேல எல்லாம் நல்லா பாத்துக்குங்க. அநேகமா, நம்ம கட்சியின் ' உ.வெ.கொ.ப.ச' வா மாநாட்டு மேடைல உங்கள நம்ம கேப்டன் அறிவிச்சுடுவார்', அப்டின்னர். வழக்கம்போல மொடாக்குக்கு புரியல.'அது என்னங்க...உ.வெ.கொ.ப.ச. ?' அப்டின்னேன். கொஞ்சம் முறைச்சார். பிறகு, மூஞ்சில ஒரு சிரிப்பை ஓடவிட்டு, 'உள்நாட்டு வெளிநாட்டுக்கு கொள்கை பரப்புச் செயலாளர்' என்றார். அப்டின்னா, கட்சிக்கு முழுசுமா நாந்தான் கொ.ப.ச. அப்டின்ற உண்மை புரிஞ்சுது. அடுக்கடுக்கா எனக்கு பதவிக்கு மேல பதவியா கொடுத்துட்டு மச்சான் 'டக்'னு போய்ட்டார்.'ஆஹா, இன்னும் ரொம்ப விதயம் டிஸ்கஸ் பண்ணாம போய்ட்டோமே'ன்னு இருந்திச்சு.ஏன்னா, எனக்குத் தெரியும். இந்த விஷயம் லீக் ஆனதும் 'எனக்கு கட்சியில இந்த பதவி வாங்கிக்கொடு, அந்தப் பதவி வாங்கிக்கொடு; நம்மள அப்டி கவனிச்சுக்கோ, இப்டி கவனிச்சுக்கோன்னு' நம்ம வலைஞர்கள் மொய்ச்சுடுவாங்கன்னு. எல்லாம் நல்லா யோசிச்சுதான் செய்யணும்னு முடிவெடுத்திருக்கேன். சும்மா இந்த லொள்ளு பண்ற கேசுகள எல்லாம் பக்கத்தில சேத்துக்கவே கூடாது.மாநாட்டு வேல தலைக்கு மேல இருக்கு... மச மசன்னு நிக்காம வேல ஆரம்பிக்கணும்னு நினச்சுக்கிட்டு இதோ மதுரைக்குக் கிளம்பிட்டேன் இன்னைக்கு ராத்திரியே! அங்க பாப்போம்...சரியா?