Sunday, November 16, 2008

பிரதமர் மன்மோகன்சிங் - "எட்டும் எட்டப்பனும்"

பிரதமர் மன்மோகன்சிங் - "எட்டும் எட்டப்பனும்"

*

அரசியல் கலப்பில்லாத பொருளாதார மேதையான மன்மோகன் சிங் நாட்டின் பெரும் பொருளாதாரச் சிக்கலைத் தீர்த்து வைக்கவே முதன் முதல் நரசிம்மராவால் அரசியலுக்குக் கொண்டுவரப் பட்டார். இதனாலேயே அவர்மீது எனக்கு மிக்க மரியாதை உண்டு. ஆனால் இந்த அணு சக்தி விவகாரத்தில் ஏனிப்படி அவரும், அவரது அரசும் கட்சியும் ஒரு முரட்டுத்தனமான நிலைப்பாடை எடுக்கின்றன என்பது புரியாத புதிராகவே முதலிலிருந்து இருந்து வந்துள்ளது.

நாட்டின் நீர்நிலைகளிலிருந்து மின்சாரம் தயாரிப்பது என்பதில் குறைந்த செலவில் நிறைய சக்தி பெருவதற்கானச் சாத்தியக் கூறுகள் மிக அதிகமாக இருப்பினும் ஏன் பல சூழலியல் காரணங்களுக்காக எதிர்க்கப்படும் அணு ஆலைகளுக்கு மிகப் பெரும் செலவு செய்யவே நமது அரசு எப்போதும் தயாராக இருக்கிறது என்பதே புரியாத ஒரு காரியம். இவ்வளவு செலவு செய்தும், வானத்திலிருந்து கொட்டுவதுபோல் மின்சாரம் நமக்கு குறைந்த செலவில் கிடைக்கப் போவதில்லை; தன்னிறைவையும் காணமுடியாது; அணு ஆலைகளின் அழிக்கவோ மாற்றவோ முடியாத அதன் கழிவுப் பொருட்கள் என்ற பல பிரச்சனைகள் இருந்த போதிலும் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் அடுத்தடுத்து அணுஆலைகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் அரசியல் புரியவில்லை.

123 திட்டம், Hyde Act, N.S.G., என்று நித்தம் நித்தம் ஊடகங்களில் வரும் செய்திகள் மக்கள் மனத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மட்டுமே பயன்பட்டன. இருபக்க விவாதங்களிலும் இருந்த தெளிவின்மையோ, அவரவர் சார்புக்கேற்றவாறு தரப்பட்ட விவாதங்களோ மேலும் மேலும் தெளிவின்மையை மட்டும் கொடுத்து வந்துள்ளன. ஆனால் 05,செப்ட். இந்து நாளிதழில் வந்துள்ள ஒரு கட்டுரை நம் அரசின், அயல்நாட்டமைச்சரின் எல்லாவற்றிற்கும் மேலாக நமது பிரதம மந்திரியின் “பொய்களை” வெளிப்படுத்துகின்றன. கட்டுரை ஆசிரியர்: Brahma Chellaney, a professor of strategic studies at the Centre for Policy Research in New Delhi, is the author, among others, of “Nuclear Proliferation: The U.S.-India Conflict.

கட்டுரையின் தலைப்பு: Revelations unravel hype and spin
தொடுப்பு: http://www.hindu.com/2008/09/05/stories/2008090553271100.htm

அமெரிக்க அரசின் இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தம் பற்றிய சில குறிப்புகள் –இதுவரை வெளியிடப்படாமலிருந்தவைகள் – இப்போது வெளிவந்துள்ளதையும் அந்தக் குறிப்புகளுக்கு முற்றிலும் எதிர்மறையானக் கருத்துக்களை நமது அரசும் பிரதம மந்திரியும் நம்மிடம் சொல்லி வந்திருக்கிறார்கள் என்பதையும் இக்கட்டுரை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்:

அமெரிக்க அரசின் குறிப்பு 1: இந்த ஒப்பந்தம் அமெரிக்காவை எவ்வகையிலும் எரிபொருளை இந்தியாவுக்குத் தொடர்ந்து தருவதற்கு வற்புறுத்தாது.
ஆனால் மன்மோகன்சிங் தொடர்ந்து அமெரிக்கா எரிபொருளைத் தரும் என்று ஆகஸ்ட்13, 2007-ல் மக்களவையில் கூறியுள்ளார்.

அமெரிக்க அரசின் குறிப்பு 2: இந்தியா எக்காரணம் கொண்டும் எப்போதும் அணு சோதனைகளை நடத்தக் கூடாது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: நமது அணுசோதனகளுக்கு எவ்விதத் தடையுமில்லை.

அமெரிக்க அரசின் குறிப்பு 3: 123 உடன்பாடு Hyde ACtக்கு உட்பட்டது.
ஜூலை 2, 2008 – மன்மோகன்சிங்: 123 உடன்பாடு Hyde Actக்கு உட்பட்டதல்ல.

அமெரிக்க அரசின் குறிப்பு 4: எரிபொருள் தருவதோ எப்போது வேண்டுமென்றாலும் நிறுத்துவதோ அமெரிக்க அரசின் விருப்பத்திற்குரியது.
ஆகஸ்ட் 13, 2007 – மன்மோகன்சிங்: விரிவான பல அடுக்கு ஆலோசனைக் கட்டங்கள் இருப்பதால் எரிபொருள் நிறுத்தப்படும் சாத்தியமில்லை.

அமெரிக்க அரசின் குறிப்பு 5: எதிர்காலத் தேவைக்கேற்ப எரிபொருளை சேமித்து வைக்கும் உரிமையை அமெரிக்க அரசு கொடுக்காது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கு அமெரிக்க அரசு உதவும்.

அமெரிக்க அரசின் குறிப்பு 6: 123 உடன்பாட்டிலிருந்து வேறுபடும் எந்த முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது.
ஆகஸ்ட் 13,2007 – மன்மோகன்சிங்: உடன்பாட்டிற்குப் பிறகும் எந்த புது மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமையுள்ளது.

அமெரிக்க அரசின் குறிப்பு 7: உடன்பாட்டின்படியோ இல்லை அதைவிடுத்தோ அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அணுசக்தியைப் பற்றிய எந்த புதுதொழில் நுட்பங்களையும் பெற உதவாது.
மன்மோகன் சிங்: இந்த உடன்பாடு இந்தியா புது தொழில்நுட்பங்களைப் பெறவும் நாட்டை தொழில்மயமாக்கலில் முன்னேற்றவும் உதவும்.

அமெரிக்க அரசின் குறிப்பு 8: தமிழ்ப் படுத்த சிரமம். அங்கேயே போய் வாசித்துக்கொள்ளுங்களேன்.

ஆக, இந்த எட்டு அமெரிக்க அரசின் குறிப்புகளுக்கு நேர் எதிரிடையாக நம் பிரதமர் அளித்துள்ள விளக்கங்களை வாசித்தபோது எட்டும் எட்டப்பனும் என்ற தலைப்பு மனதில் தோன்றியது. நம் நாட்டை அடகு வைக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது. எத்தனையோ எரியும் பிரச்சனைகள் இருந்தும் அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக்கொண்டு தொங்குவதும் ஏனென்று தெரியவில்லை; தெரிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்களேன்.

*