Thursday, July 10, 2008

இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல


இது தசாவதாரம் விமர்சனப் பதிவு அல்ல. அந்தப் படம் பார்த்த கதை. அவ்வளவே.போன வெள்ளிக்கிழமை. தங்க்ஸோடு சினிமா பார்த்திர்ரதுன்னு முடிவு செய்து, மதுரையிலேயே தசா நடக்கிறதில்ல எது நல்ல தியேட்டர் என்று நாலுபேருகிட்ட விசாரிச்சி, வீட்ல இருந்து ரொம்ப தொலைவில் - திருநகரில் - உள்ள இம்பாலா படக் கொட்டகையை முடிவு செஞ்சி அதுக்காகவே அங்க இருக்கிற தங்க்ஸின் அண்ணன் வீட்டுக்குச் செய்தி சொல்லியாச்சி. அவங்க வீட்டுக்குச் சீக்கிரமே போனாலும் படம் எத்தனை மணிக்குச் சரியா போடுவாங்கன்னு தெரிஞ்சுக்கணுமே. ஏன்னா நம்ம பதிவுலக மக்கள் எல்லோரும் ஒருமித்து சொன்ன ஒரே விஷயம் முதல் 15 நிமிடம் உலகத்தரம் அப்டின்னு. அதை மிஸ் பண்ணிடக்கூடாதே அப்டின்றதுக்காக போற வழியில் இருந்த கொட்டகைக்குப் போய் எப்போன்னு கேட்டுடலாம்னு நேரே அங்க போனோம்.கொட்டகைக்கு முன்னால் போய் நின்னதும் வாயில்காப்பாளர் எங்களை நோக்கி ஓடிவந்தார். எப்போ படம் அப்டின்னு கேட்டோம். மதியம் இரண்டரைக்கு என்றார். காலைக்காட்சி அப்போது நடந்து கொண்டிருந்தது. டிக்கெட் எல்லாம் சுலபமா கிடைக்குமா என்று கேட்டேன். கிடைக்கும். ஆனால் இப்பவே வாங்கிக்கொள்ளுங்களேன் என்றார். சரி,இறங்கி வாங்குவோம்னு நினைத்த போதே தானே வாங்கித் தருவதாக மிக அன்பாகச் சொன்னார். இருந்தும் தியேட்டர் எப்படி இருக்கிறதென்றும் பார்ப்போமே என்று எண்ணி உள்ளே சென்றேன்.தடபுடலாக பயங்கர மரியாதையோடு என்னோடுகூடவே காப்பாளரும் வந்தார். சீட்டு கொடுக்குமிடம் வந்தது எவ்வளவு என்றேன். காப்பாளர் எனக்கான முடிவை அவரே எடுத்துவிட்டார். 'சார், உங்கள பார்த்ததுமே நினச்சிட்டேன்; 100 ரூபாய் டிக்கெட் எடுங்க' என்றார். நம்மைப் பார்த்தாலே அப்படியா ஈனா வானா மாதிரி தெரியுது அப்டின்னு நானா நினச்சிக்கிட்டேன். இந்த கொட்டகையைக் கையைக் காட்டினவர்களோ ஒரு டிக்கெட் 50 ரூபாய் என்றுதான் சொல்லியிருந்தார்கள். அதை அவரிடமே சொன்னேன். இல்ல சார், இது பாக்ஸ்; வந்து பாருங்க அப்டின்னு கையைப் பிடிக்காத குறையா கூட்டிட்டு போனார். நானும் கூடப் போய் பார்ப்போமேன்னு போய்ட்டேன். ஒரு வாசலைத் திறந்தவர் உள்ளே அழைத்தார். உள்ளே போனதும் டக்குன்னு விளக்கைப் போட்டுட்டார். மொத்தம் 4 பேர். 4 வரிசைகளில் இரண்டிரண்டு சோஃபா. 4 பேரில் இரண்டு பேர் இளம் ஜோடி. தட தடன்னு ரெண்டும் ஒருமாதிரி எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்ததுகள். காப்பாளரையும் விரைந்து வெளியே இழுத்து வந்தேன். இப்படி கரடியா மாறிட்டோமே அப்டின்னேன். எனக்கு தெரியுமா, சார் அப்டின்னு அப்பாவியா கேட்டார். இந்த பாக்ஸ் மட்டும் குளிரூட்டப்பட்டது என்றார். சரின்னு மூணு சீட்டு வாங்கிட்டு வீட்டுக்குப் போய்ட்டு 2.20-க்குத் திரும்பி வந்தோம். படம் முடிந்து கொட்டகையை சுத்தப்படுத்திட்டு 2.45 மணியளவில் படம் போட்டார்கள். காப்பாளர் இப்போது மீண்டும் வந்து விளக்கு ஸ்விட்ச் எங்க இருக்குன்னு சொல்லிட்டு, வேற ஏதும் வேணுமான்னு கேட்டார்; இல்லைன்னேன். எதுன்னாலும் சொல்லுங்க,சார் அப்டின்னு ஒரே கவனிப்பு. இந்த முறை எங்க 'பாக்ஸில்' எங்களைத் தவிர்த்து இன்னும் ரெண்டு ஜோடி. அதுல ஒண்ணு .. சரி..சரி... அத விடுங்க. படத்தைப் பார்ப்போம்.படம் எனக்குப் பிடிச்சிது; தங்க்ஸுக்குப் பிடிக்கலை. ஸ்ரேயாவும் தலைவரும் வந்து ஒரு பாட்டு பாடினா எப்படி இருந்திருக்கும்; சும்மா எல்லோரும் ஓடிக்கிட்டே, அடிச்சிக்கிட்டே இருந்தா .. என்ன இது அப்டின்னிட்டாங்க. குசேலன் கூட்டிட்டுப் போயிடவேண்டியதுதான், சிவாஜி மாதிரி.ஒண்ணு புரிஞ்சிது. கமல் ஒரே தப்பை திரும்பவும் செஞ்சிக்கிட்டே இருக்கிறார். நானும் இந்தப் படம் அவரின் magnum opus என்றெல்லாம் சொன்னதும் என்னமோ ஏதோ என்று நினச்சிட்டேன். நம்ம பதிவர்களும் எப்படி ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள் கூட எப்படி தசாவதாரத்தோடு தொடர்புள்ளன; வண்ணாத்திப் பூச்சி பறக்கிறது - choas theory - அது இதுன்னு பில்டப் கொடுத்திருந்தாங்களா, வேற மாதிரி நினச்சிட்டுத்தான் போனேன். போன பிறகுதான் தெரிஞ்சுது நம்ம டைரடக்கர்கள் எல்லோருமே தங்கள் படம் வெளியாவதற்கு முன் கொடுக்கும் பேட்டியில் 'இந்தப் படத்தில் எல்லோருக்கும் பிடித்த - காதல், பைட், செண்டிமெண்ட், நகைச்சுவை - எல்லாமும் இருக்கும் என்பார்களே அந்தமாதிரி படம்தான் இது அப்டின்னு. நான் வேற வித்தியாசமான genre என்று நினச்சது மாதிரி இல்லாம, இதுவும் எல்லாப் படமும் மாதிரியான 'ஒரே மாதிரிப்' படம் அப்டின்னு தெரிஞ்சிது. ஒரு விசயகாந்த் படத்தில் அவரை வில்லன் துப்பாக்கியால் சுட அது அவர் நெஞ்சில் பட்டு அப்படியே திரும்பி சுட்டவன் மேல் பாய்ந்து சுட்டவனையே கொன்றுவிடும்! இங்க கொஞ்சம் மாத்தி குண்டு பட்டு அவ்தார்சிங்கின் கேன்ஸர் சுகமாயிரும். உன் காதலன் உன்னைக் காப்பாற்ற திரும்பி வருவான் என்று சொல்லும்போது அசின் அதெல்லாம் வரமாட்டான் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கமல் உள்ளே நுழைய, அந்தக் கணத்திலேயே கதாநாயகிக்குக் காதல் வந்திருமே அதெல்லாம் நமக்குப் புதுசா என்ன? கதாநாயகனைத் துப்பாக்கியால் எத்தனை ரவுண்டு சுட்டாலும் அப்போ மட்டும் குண்டு குறி தவறிப் போகுமே அது நாம் எத்தனை உலகத்தரமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பார்த்திருப்போம். அத்தனை பெரிய பெருமாள் சிலையையே கடலுக்குள் இருந்து கரைக்குக் கொண்டுவந்து போட்ட சுனாமி அலைகள் நம் கதாநாயகன், கதாநாயகி இருந்த படகை மட்டும் தொடாமலே சென்று விடுமே அதெல்லாம் Our film heroes are non-destructible என்ற தத்துவத்தை ருசிப்பிக்குமே, அது புதுசா என்ன?இதெல்லாம் சாதாரண ரசிகனுக்கும் போய்ச்சேரும் விஷயங்கள். ஆனால் தன் மேதாவித்தனத்தைக் காண்பிக்கவும், நம் பல பதிவர்கள் போன்ற மேதாவிகளின் புத்திசாலித்தனத்துக்குத் தீனியாகவும் கேக் மேல் இருக்கும் icing போல் சில விஷயங்களைச் சேர்த்திருக்கிறார். அவைகள்தான் அந்த choas theory, வண்ணாத்திப் பூச்சி, ஒவ்வொரு 'அவதாரத்துக்கும்' வைத்த பெயர்கள், அந்த continuity எல்லாமுமே. இந்த முலாம் பூச்சுதான் இத்தனை காரசார விமர்சனங்களுக்கும் காரணம். இது ஒரு 'ஒரிஜினல் நயம் பொழுதுபோக்குப் படம்' அப்டின்னு முதலிலேயே சொல்லியிருந்தால் இதைவிட இந்தப் படத்துக்கு வரவேற்பு இருந்திருக்குமென நினைக்கிறேன்.ஹே ராம் ஒரு இளைஞனின் கதை என்று மட்டும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைவிட்டு விட்டு அந்தக் கதைக்குப் பல வரலாற்றுப் பூச்சுக்கள், அரசியல் வர்ணங்கள் கொடுத்ததால்தான் தேவையற்ற விவாதங்கள் படம் வருவதற்கு முன்பே. அந்த விவாதங்களே படத்திற்கு எதிர்விளைவானது. கடும் உழைப்பும், பெரும் திறனும் பின் தள்ளப்பட்டு விட்டன. கமலின் படங்களுக்கு அவைகள் வெளியாவாதற்கு முன் கொடுக்கப்படும் hype அந்தப் படங்களைப் பற்றிய தவறான புரிதல்களையோ, எதிர்பார்ப்புகளையோ கொடுத்து மக்களைத் திசை திருப்பிவிடுகின்றன.பாலகுமாரன் கதையான குணா நல்ல வேளை இதிலிருந்து கொஞ்சம் பிழைத்தது. சாதாரணமாக ஒரு கடத்தல் கதை போல் இருந்தாலும், பின்புலத்தில் பரமாத்மா (அபிராமி), ஜீவாத்மா (குணா) இடையிலான உறவு என்ற தத்துவமும், இன்னும் சில உள்ளடங்கிய தத்துவங்களும் படத்தின் வெளிப்படையான கடத்தல் கதைக்குள் பொதிந்து வைக்கப்பட்டன. புரிந்தால் புரிந்து கொள்ளப்படட்டும் இல்லாவிட்டில் இருக்கவே இருக்கிறது காதல் - கடத்தல் என்ற கதையாடல் என்பதால் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து, அதிகப் பிரச்சனைகள் இல்லாமல் ஓடியது.கமல் படங்களுக்குக் கொடுக்கப்படும் இந்த hype இல்லாவிட்டால் அவரது படங்கள் இன்னும் ரசிக்கப்படும் என்றே தோன்றுகிறது.அதென்ன .. எல்லாரும் சொல்லி வச்சாப்புல தசா.வில ஜெயப் பிரதாவைப் பத்தி ஒண்ணுமே கண்டுக்கலை .. சே.. ஓல்டுன்னாலும் கோல்டு கோல்டுதான்!